அமெரிக்காவில் 30 நாட்களுக்கு மேல் தங்கியிருக்கும் அனைத்து வெளிநாட்டினரும் மத்திய அரசிடம் பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் அபராதம் மற்றும் சிறைத்தண்டனையைத் தவிர்க்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. trump set new rules for immigrants
அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் மீண்டும் பொறுப்பேற்ற டொனால்ட் ட்ரம்ப் குடியேற்றக் கொள்கை, வரிவிதிப்பு, விசா கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
பதவியேற்றதும் முதல் வேளையாக சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்த இந்தியர்கள் உட்பட பல்வேறு நாட்டினரைக் கண்டுபிடித்து, அவர்களை கைது செய்து நாடு கடத்தினார். தொடர்ந்து பரஸ்பர வரிவிதிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
அதன் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக அமெரிக்காவுக்குள் நுழையும் வெளிநாட்டினரை அரசின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் நோக்கத்தில் முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளார் டிரம்ப்.
இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் உதவியாளர் மற்றும் வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் இன்று (ஏப்ரல் 12) செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர், “அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் அனைவரும் 30 நாட்களுக்கு மேல் தங்கினால், அவர்கள் அரசிடம் பதிவு செய்துகொள்ள வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால், அது குற்றம். அடையாள அட்டையையும் வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லையெனில் கைது, அபராதம், சிறைத் தண்டனை அல்லது நாடு கடத்தப்படுதல் ஆகிய தண்டனைகளை சந்திக்க வேண்டும். அவர்கள் ஒருபோதும் மீண்டும் அமெரிக்காவுக்குத் திரும்ப முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய விதியின்படி, விசா வைத்திருப்போர், கிரீன் கார்டு பெற்றவர்கள் மற்றும் பணி செய்ய அனுமதி பெற்ற தனிநபர்கள் மற்றும் 30 நாட்களுக்கு மேல் அமெரிக்காவில் வசிக்கும் அனைத்து வெளிநாட்டினரும் சட்டப்பூர்வ அந்தஸ்து நிரூபிக்கும் ஆவணங்களை எல்லா நேரங்களிலும் வைத்திருக்க வேண்டும். அதற்கு இணங்கத் தவறினால் $5,000 வரை அபராதம் அல்லது 30 நாட்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
மேலும் நாட்டில் 14 வயது நிறைவடையும் குழந்தைகள் தங்கள் பிறந்த நாளில் இருந்து 30 நாட்களுக்குள் கட்டாயம் மறுபதிவு செய்து கொண்டு, அவர்களுடைய கைவிரல் ரேகைகளை சமர்ப்பிக்க வேண்டும்.
ஏப்ரல் 11 அன்று அல்லது அதற்குப் பிறகு நாட்டிற்குள் நுழையும் எந்தவொரு வெளிநாட்டினரும் அடுத்த 30 நாட்களுக்குள் பதிவு செய்து கொள்வதும் கட்டாயம்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.