அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், அணு ஆயுத சோதனைகளை உடனடியாக மீண்டும் தொடங்க அமெரிக்க ராணுவத்திற்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். 33 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா அணு ஆயுத சோதனையை மேற்கொள்வது உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் அணுசக்தி ஏவுகணை மற்றும் நீர்மூழ்கி ட்ரோன் சோதனைகளுக்கு பதிலடியாகவே டிரம்பின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரஷ்யா சமீபத்தில் ‘புரெவெஸ்ட்னிக்’ (Burevestnik) எனப்படும் அதிநவீன அணுசக்தி ஏவுகணையையும், ‘போசைடன் சூப்பர் டார்பிடோ’ (Poseidon Super Torpedo) என்ற அணுசக்தி நீர்மூழ்கி ட்ரோனையும் வெற்றிகரமாக சோதித்த சில நாட்களுக்குப் பிறகு டிரம்பின் இந்த உத்தரவு வெளியாகி உள்ளது.
ரஷ்யா தனது அணு ஆயுதத் திட்டங்களை தீவிரப்படுத்திய நிலையில், அமெரிக்கா அமைதியாக இருக்காது என்பதை டிரம்ப் இதன் மூலம் உணர்த்தியுள்ளார்.
டிரம்ப் தனது எக்ஸ் சமூக ஊடகப் பதிவில், “அமெரிக்கா பிற நாடுகளைவிட அதிக அணு ஆயுதங்களை வைத்துள்ளது. எனது முதல் ஆட்சிக் காலத்தில் ஆயுதங்களை புதுப்பித்ததால் இது சாத்தியமானது” என்று பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். அணு ஆயுதங்களின் எண்ணிக்கையில் ரஷ்யா இரண்டாம் இடத்திலும், சீனா மூன்றாம் இடத்திலும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் சீனாவிடம் அமெரிக்காவிற்கு சமமான அணு ஆயுதங்கள் இருக்கும் என்றும் டிரம்ப் கணித்துள்ளார்.
உலக நாடுகள் அணு ஆயுத திட்டங்களைச் சோதிக்கும் நிலையில், அமெரிக்காவின் அணு ஆயுதங்களை சம அளவில் பரிசோதிக்க ‘போர்த் துறைக்கு’ (Department of War) உத்தரவிட்டுள்ளதாகவும், இது உடனடியாகத் தொடங்கும் என்றும் டிரம்ப் தனது பதிவில் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா கடைசியாக 1992 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 அன்று நெவாடாவில் உள்ள நிலத்தடி மையத்தில் “டிவைடர்” என்ற குறியீட்டுப் பெயரில் தனது 1,054வது அணு ஆயுத சோதனையை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
33 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்கினால், இது உலகளாவிய ஆயுதக் கட்டுப்பாட்டு முயற்சிகளை மேலும் பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது. அணு ஆயுதப் பரவலைக் கட்டுப்படுத்த பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்த அனைத்து சர்வதேச ஒப்பந்தங்களுக்கும், முயற்சிகளுக்கும் இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தென் கொரியாவின் புசான் நகரில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு முன்னதாக இந்த அறிவிப்பு வெளியானது மேலும் கவனத்தைப் பெற்றுள்ளது. டிரம்பின் இந்த அதிரடி முடிவு, உலக அரசியல் அரங்கில் புதிய அணு ஆயுதப் போட்டிக்கு வழிவகுக்கும் என்ற அச்சத்தை அதிகரித்துள்ளது.
