ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2006ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்ப்புடன் உடலுறவு வைத்திருந்ததாக ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் குற்றம்சாட்டியிருந்தார். இந்த விவகாரம் குறித்து வெளியே சொல்லாமல் இருப்பதற்கு தனக்கு ஹஸ் மணி, அதாவது பணம் கொடுத்ததாகவும் கூறியிருந்தார்.
இந்தநிலையில் டிரம்ப் தனது முன்னாள் சட்ட ஆலோசகர் மைக்கேல் கோஹனுக்கு, ‘சட்டச் செலவுகள்’ என பதிவு செய்து பணம் கொடுத்ததாக கூறப்பட்டது.
2016ஆம் ஆண்டு தேர்தல் நிதியில் இருந்து இந்த பணம் கொடுக்கப்பட்டதாகவும், சுமார் 1.3 லட்சம் டாலர் மதிப்பிலான இந்த பணம் ஸ்டார்மி டேனியல்ஸ்க்கு கொடுக்கப்பட்டதாகவும் டிரம்ப் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக அவர் மீது 34 புகார்கள் அளிக்கப்பட்டன. இந்த புகார்கள் தொடர்பாக ஸ்டார்மி டேனியல்ஸ் உட்பட 22 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. ஆறு வாரங்களாக விசாரணை நடைபெற்றது.
டிரம்ப் தரப்பில் 11 இன்வாய்ஸ், 11 காசோலை மற்றும் 12 வவுச்சர்கள் உள்ளிட்ட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் இவை போலி என விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
இந்தநிலையில் டிரம்ப் மீதான இந்த வழக்கில், அமெரிக்காவின் உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 4.30 மணிக்கு நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் நீதிமன்றத்தின். 12 பேர் அடங்கிய ஜூரி குழு தீர்ப்பு வழங்கியது.
டிரம்ப் குற்றவாளி என்று அறிவித்த நீதிபதி மெர்க்கன், தண்டனை விவரங்கள் ஜூலை 11ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் இன்னும் 5 மாதங்களில் புதிய அதிபருக்கான தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், குடியரசு கட்சி சார்பில் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார் டிரம்ப் . இந்தநிலையில் அவர் குற்றவாளி என தீர்ப்பு வெளியாகியுள்ளது.
இந்த தீர்ப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அதிபர் டிரம்ப், “இது மோசடியான வழக்கு. நான் ஒரு அப்பாவி. உண்மையான தீர்ப்பு அதிபர் தேர்தலில் மக்களால் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.
அதிபர் ஜோ பைடனின் பிரச்சாரக் குழு, “யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் இல்லை. தனது ஆட்சிக்காலத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானவர் டிரம்ப். அவரை தோற்கடிப்பதற்கான ஒரே வழி தேர்தல் தான். நீதிமன்ற அறை அல்ல” என தெரிவித்துள்ளது.
குற்ற வழக்கு ஒன்றில் அதிபரோ அல்லது முன்னாள் அதிபரோ விசாரிக்கப்படுவதும் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்படுவதும் அமெரிக்க வரலாற்றில் இதுவே முதன்முறை.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
3 ஆயிரம் ஆபாச வீடியோக்கள்… நாடு திரும்பிய பிரஜ்வல்: நள்ளிரவில் கைது!
என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் ஏடிஎஸ்பி வெள்ளதுரை சஸ்பெண்ட்: ஏன்?
Comments are closed.