இஸ்ரேல்- ஈரான் இரு நாடுகளும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டிருப்பதாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். Trump ceasefire Israel Iran
அணுசக்தி விவகாரத்தில் ஈரானுடனான இஸ்ரேல் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து ஈரானின் அணுசக்தி நிலையங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் கடந்த ஜூன் 13-ந் தேதி திடீரென தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரானும் ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேல்- ஈரான் இடையேயான இந்த யுத்தத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பலியாகினர். ஈரானின் முக்கிய ராணுவ தளபதிகள், அணுசக்தி விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் இஸ்ரேலுடன் கை கோர்த்த அமெரிக்காவும் ஈரான் மீது திடீரென தாக்குதல் நடத்தியது. அமெரிக்காவின் போர் விமானங்கள், ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தின.
இதற்கு பதிலடி தரும் வகையில் கத்தார் நாட்டில் உள்ள அமெரிக்காவின் விமானப் படை தளம் மீது ஈரான் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியது.
இந்த நிலையில் இஸ்ரேல்- ஈரான் இடையே 12 நாட்கள் நீடித்த இந்த யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இரு நாடுகளிடையேயான போர் நிறுத்தம் 24 மணிநேரத்தில் அமலுக்கு வரும்; இருநாடுகளும் போர் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வாழ்த்துகள் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
