இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனுடன் எந்தவித மனக்கசப்பும் இல்லை என ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் சுமார் 11 ஆண்டுகளாக இடம்பெறுவதும், பின்னர் நீக்கப்படுவதுமாக இருந்தார் சஞ்சு சாம்சன். இந்நிலையில், 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதுவரை சஞ்சு எந்தவொரு உலகக்கோப்பை அணியிலும் இடம் பெறவில்லை. இந்த உலகக்கோப்பை தொடரே சஞ்சுவின் முதல் தொடராகும்.
சஞ்சு சாம்சன் சிறந்த விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேன் என்றாலும், உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் முன்னணி விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் உள்ளார். எனவே, ரிஷப் பண்டை மீறி சஞ்சுவால் பிளேயிங் லெவனில் இடம்பெற முடியவில்லை.
இந்நிலையில், சமூக ஊடகங்களில் சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பண்ட் குறித்து பல்வேறு கருத்துகள் பரவியது. இந்திய கிரிக்கெட் நிர்வாகம் சஞ்சு சாம்சனை புறக்கணித்து விட்டதாகவும், அதற்கு ரிஷப் பண்ட் தான் காரணம் எனவும் கிரிக்கெட் ரசிகர்கள் ஊடகங்களில் பதிவிட்டு வந்தனர்.
இதன் காரணமாக, சஞ்சு சாம்சன் – ரிஷப் பண்ட் இடையே மனக்கசப்பு உள்ளதாக பலர் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன் குறித்து பேசியுள்ளார். அதில், “சஞ்சு சாம்சனுக்கும் எனக்கும் இடையே நல்ல நட்பு உள்ளது. சஞ்சு எப்போதும் அமைதியான மனநிலையில் இருப்பார்.
சமூக வலைதளங்களில் எங்களைப் பற்றி நிறைய விஷயங்கள் பேசுகிறார்கள் என்று எங்களுக்கு தெரியும். ஆனால், நாங்கள் இருவரும் தனிப்பட்ட முறையில் அதில் கவனம் செலுத்துவதில்லை.
நாங்கள் ஒரே அணியில் இடம்பெற்றுள்ள சக வீரர்கள். எங்கள் இருவருக்கும் இடையே நல்ல மரியாதை உள்ளது” என ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘ரயில்’ ஆக மாறிய ‘வடக்கன்’: ரிலீஸ் எப்போது?
Gold Rate: சட்டென குறைந்த தங்கம், வெள்ளி விலை… எவ்வளவு தெரியுமா?