‘த்ரிகண்டா. என்ற படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நிகழ்வில் இயக்குனர் கேபிள் சங்கர் பேசும்போது, “படத்தின் டைட்டிலைப் பார்த்தபோது ஏதோ சின்ன பட்ஜெட் படமாக இருக்கும் என்று நினைத்தால் ட்ரெய்லரை பார்க்கும்போது பிரம்மாண்டமாக தெரிகிறது.
இவர்கள் செய்திருக்கும் செலவு நன்றாகவே தெரிகிறது. அதுவே இந்த படம் ஒரு கமர்ஷியல் படமாக வரும் என்கிற நம்பிக்கையை கொடுக்கிறது.
2025ஆம் வருடம் தமிழ் சினிமா எப்படி இருந்தது, லாபம் எவ்வளவு நட்டம் எவ்வளவு என ஒரு விவாதம் அனைவரிடமும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்த வருடம் தமிழ் சினிமா நன்றாகவே இருந்தது. நிறைய சிறு முதலீட்டு படங்கள் மூலம் தயாரிப்பாளர்களுக்கு லாபகரமாக மாறிய நிகழ்வு இந்த வருடம் நிறைய நடந்திருக்கிறது. இப்போது வெளியாகி இருக்கும் சிறை திரைப்படம் கூட சின்ன பட்ஜெட்டில் உருவானது என்றாலும் வெளியாவதற்கு முன்பே அதன் அனைத்து உரிமைகளும் நல்ல விலைக்கு விற்றுள்ளது. படத்திற்கு நல்ல விமர்சனங்களும் வந்திருக்கின்றன.
ஹவுஸ் மேட்ஸ், மிடில் கிளாஸ், ஆரோமலே போன்ற சில படங்கள் தயாரிப்பாளர்களுக்கு அவர்கள் போட்ட முதலீட்டை எடுத்துக் கொடுத்திருக்கின்றன. இது பாராட்டத்தக்க விஷயம் தான். இப்படி இருக்கின்ற நிலையில் திருப்பூர் சுப்ரமணியன் போன்ற அனுபவம் மிக்க ஆட்கள் சினிமா நன்றாக இல்லை, நடிகர்கள் வீட்டில் சும்மா இருக்கிறார்கள் என்று சொல்கிறார். ஆனால் அவர் சொல்வது போல இல்லாமல் அனைத்து நடிகர்களும் குறைந்தது நான்கு படங்களாவது பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
தியேட்டரில் கூட்டம் வருகின்ற படம் மட்டும்தான் வெற்றி படம் என்று சொல்ல முடியாது. தயாரிப்பாளர் போட்ட முதலீடு அவருக்கு திரும்பி கிடைத்து விட்டாலே அது வெற்றி படம் தான். வாராவாரம் காந்தாரா போன்ற படங்கள் வெளியாக முடியுமா என்ன ? சின்ன சின்ன படங்கள் வரத்தான் செய்யும். அதற்கான வசூலை பெறத்தான் செய்யும். சினிமா நன்றாக இருக்கிறது. சந்தோஷமாக சின்ன பட்ஜெட் படங்களை எடுங்கள்.
படம் திரையிடும் கியூப்பும் UFOவும் தாங்களே தனி ஆளுமை பண்ண கூடாது என்பதற்காக அவர்களுக்கு இரண்டு கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்களே தங்களது படங்களை ஹார்ட் டிஸ்க்கில் எடுத்துக்கொண்டு திரையரங்குகளுக்கு சென்று கொடுத்து திரையிட சொல்லலாம். ஆனால் எந்த தயாரிப்பாளர் சங்கமும் இது பற்றி பேசவில்லை. இதில் ஒரு பெரிய அரசியல் இருக்கிறது. அந்த அரசியலை சரியாக செய்து விட்டால் சின்ன பட்ஜெட் படங்களை திரையரங்குகளில் திரையிடுவதில் மிகப்பெரிய செலவு இருக்காது என தெரிகிறது” என்கிறார்.
கதாநாயகி சாஹிதி அவான்ஷா பேசும்போது, “ தமிழ் சினிமா தான் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்.”என்றார்.
படத்தின் தயாரிப்பாளர் சீனிவாசன் பேசும்போது, “தெலுங்கில் நான் மூன்று படங்கள் தயாரித்துள்ளேன். தமிழில் இது எனது முதல் படம். தமிழில் இதை ஏன் தயாரித்திருக்கிறேன் என்றால் குமரிக்கண்டம், பழமையான தமிழர்கள் என இது முழுக்க தமிழுக்கான கதை. இந்த படத்தை துவக்கும்போதே நல்ல மனிதர்கள் இதில் இணைய வேண்டும் என்று நினைத்தேன். அப்படித்தான் இயக்குநர் மணி உள்ளே வந்தார். அனைவரும் இதில் வந்தார்கள்.
நாம் நல்ல கதையை தேர்வு செய்யும்போது, மக்கள் அதை பார்க்க முன்வருவார்கள்.. கடந்த வருடத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என எந்த மொழியை எடுத்துக் கொண்டாலும் அதில் அதிகப்படியான வசூலை கொண்டு வந்தது சின்ன பட்ஜெட் படங்கள் தான். மகேந்திரனை இந்த படத்தின் கதாநாயகனாக தேர்வு செய்வதற்கு காரணம் அவரை எல்லா மொழியில் இருப்பவர்களுக்கும் நன்கு தெரிகிறது. அவர் ஒரு சவுத் இந்தியன் ஸ்டார்” என்று பேசினார்.
தெலுங்கு படத் தயாரிப்பளர்கள் எல்லாம் குமரிக்கண்டம் பற்றிப் படம் எடுக்கிறார்கள். ஆனால் தமிழ் படத் தயாரிப்பாளர்கள் எல்லாம் குமரிகளின் பின்புறங்களைக் காட்டும் படங்களைத்தான் எடுக்கிறார்கள்.
அப்புறம் என்ன நடக்கும்?
தமிழ் வரலாற்று நாவல்களை எல்லாம் பாகுபலி படத்தில் சுட்டு எடுத்து தெலுங்கு வரலாறாக ராஜ மவுலி மாற்றியது போல, குமரிக் கண்டத்தில் வாழ்ந்தவர்கள் தெலுங்கர்கள் என்று அவர்கள் சொல்லிக் கொள்வார்கள்.
நாம் விரல் சூப்புவோம்!!
- ராஜ திருமகன்
