திருச்சி பஞ்சப்பூர் ‘முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில்’ இன்று ஜூலை 16-ந் தேதி முதல் பேருந்துகள் இயக்கப்பட்டு முழு அளவில் பயன்பாட்டுக்கு வந்தது. Trichy Panjappur
திருச்சி மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூரில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து முனையம் பிரம்மாண்டமாக கட்டப்பட்டது. இந்தப் பேருந்து நிலையத்தை கடந்த மே 9-ந் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த நிலையில் இன்று ஜூலை 16-ந் தேதி முதல் முழு அளவில் பஞ்சப்பூர் பேருந்து முனையம் பயன்பாட்டுக்கு வந்தது. திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் பேருந்து சேவைகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
பஞ்சப்பூர் பேருந்து நிலையம்
- 38 ஏக்கர் பரப்பளவில் ரூ408.36 கோடியில் கட்டப்பட்டுள்ள பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் மொத்தம் 401 பேருந்துகளை நிறுத்தலாம்.
- தரை தளத்தில் 345 வெளியூர் பேருந்துகள், மேல் தளத்தில் 56 உள்ளூர் பேருந்துகள் நிறுத்தும் வசதி உள்ளது.
- 1935 டூ வீலர்கள், 216 கார்கள்,160 ஆட்டோக்களை இங்கு நிறுத்த முடியும்
- பேருந்து நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் குளிரூட்டப்பட்ட வசதி செய்யப்பட்டுள்ளது.
- 20 தேநீர் கடைகள், 12 உணவகங்கள், 10 சிற்றுண்டி கடைகள் அமைக்கப்பட்டுள்ளன
- 173 சிறுநீர் கழிவறைகள், 21 குளியல் அறைகள் கட்டப்பட்டுள்ளன
- பேருந்து நிலையத்தை தூய்மையாக வைத்திருக்க 228 தூய்மை பணியாளர்கள் பணியில் உள்ளனர்.
- பயணிகளின் பாதுகாப்புக்கு 52 போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
- பயணிகளுக்கு உதவ 30 தன்னார்வலர்களும் உள்ளனர்
- முதியோர் உள்ளிட்டோருக்காக 3 பேட்டரி வாகனங்கள், மருத்துவ குழு உள்ளது.
- ஆம்னி பேருந்துகளுக்கு தனி பேருந்து நிலையம் ரூ17.60 கோடியில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டப்பட்டு வருகிறது.
