பாஜக பெண் நிர்வாகி அளித்த புகாரில் திருச்சி சூர்யாவை சென்னை சைபர் கிரைம் காவல் துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.
தமிழக பாஜக மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவுச் செயலாளர் அலிஷா அப்துல்லா. இந்தியாவின் முதல் பெண் தேசிய மோட்டார் பந்தய சாம்பியனான இவர், நேற்று சென்னை காவல் ஆணையர் அமல்ராஜை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து, யூடியூபர் முக்தார் மற்றும் திருச்சி சூர்யா ஆகியோர் மீது புகார் மனு ஒன்றை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அலிஷா, “யூடியூபர் முக்தார் மற்றும் திருச்சி சூர்யா ஆகியோர் சமூக ஊடகங்களில் என்னைப் பற்றியும், குழந்தைகள் குறித்தும் அவதூறான கருத்துகளைப் பேசி வீடியோ வெளியிட்டுள்ளனர். அவர்கள் மீது தவெக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.
இந்நிலையில், அலிஷா அளித்த புகாரின் அடிப்படையில், திருச்சியில் வைத்து திருச்சி சூர்யாவை சைபர் கிரைம் காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.
முன்னதாக, பாஜகவின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநிலப் பொதுச் செயலாளராகச் செயல்பட்டு வந்த திருச்சி சூர்யா, பெண் நிர்வாகி ஒருவரிடம் தொலைபேசியில் அவதூறாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட அவர், பின்னர் மீண்டும் சேர்க்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, கட்சி நிர்வாகிகள் குறித்துத் தொடர்ந்து அவதூறான கருத்துகளைப் பதிவிட்ட குற்றச்சாட்டின் கீழ், கடந்த 2024ஆம் ஆண்டு பாஜகவில் இருந்து திருச்சி சூர்யா நிரந்தரமாக நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.










