திருச்சி எஸ்.பி வருண்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அக்கட்சியின் நிர்வாகிகள் 22 பேர் மீது திருச்சி தில்லை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் குறித்து அவதூறாக பாடல் பாடிய புகாரில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகனை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
இந்த கைது கண்டித்து பேசிய சீமான், சாட்டை துரைமுருகன் கைதுக்கு வருண்குமார் எஸ்.பி தான் காரணம் என்றும் தேவர், நாடார், கோனார், தேவேந்திரர் என அனைத்து சமுதாயத்தினரையுமே வருண்குமாருக்கு பிடிக்காது என்றும் குற்றம்சாட்டினார்.
இந்தநிலையில், சமூகவலைதளங்களில் வருண்குமார் மற்றும் அவரது வீட்டு பெண்களுக்கு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கொலை மிரட்டல் விடுப்பதாக திருச்சி மாநகர தில்லை நகர் காவல் நிலையத்தில் வருண் குமார் புகாரளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் சீமான், சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்ட 22 பேர் மீது மிரட்டல் விடுப்பது, ஒருநபரை அவமதிப்பது, அமைதியை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை பதிவிடுவது, தகவல் தொழில்நுட்பங்களை தவறாக பயன்படுத்துவது உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த கண்ணன் மற்றும் மதுரையை சேர்ந்த திருப்பதி ஆகியோரை தில்லை நகர் போலீசார் நேற்று (ஆகஸ்ட் 13) கைது செய்தனர். திருச்சி நீதிமன்ற நீதிபதி சுபாஷினி முன்பு அவர்களை ஆஜர்படுத்தினர். இதனைதொடர்ந்து இருவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆம்ஸ்ட்ராங் கொலை… சம்பவ செந்தில் உயிருடன் பிடிபடுவாரா? துரத்தும் 3 டீம்கள்! ஷாக் ரிப்போர்ட்!
டாப் 10 நியூஸ்: அரவிந்த் கெஜ்ரிவால் சிபிஐ வழக்கு முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் வரை!