திருச்சியில் முதியவர் ஒருவர் மீது நடுரோட்டில் வைத்து இருவர் தாக்குதல் நடத்திய வீடியோக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் லால்குடி தண்டாங்கோரை பகுதியில் பழமைவாய்ந்த சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த கோவிலை அந்த பகுதியில் வசிக்கும் 72 வயதான முதியவர் தெய்வராஜன் பாரமரித்து வருகிறார்.
இந்தநிலையில், கோவிலைச் சுற்றி சுற்றுச்சுவர் கட்டும் பணியானது தற்போது நடைபெற்று வந்துள்ளது. இதில் ராஜ்குமார் என்பவர் கோவில் பகுதியில் மாட்டுக் கொட்டகை அமைத்து கோவில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளார்.

இதனையடுத்து, கோவில் நிலத்தில் மாட்டு கொட்டகை அமைக்க முடியாது. ஆக்கிரமைப்பை அகற்ற வேண்டும் என்று தெய்வராஜன், ராஜ்குமாரிடம் வலியுறுத்தியுள்ளார். ஆனால், இதற்கு ராஜ்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது.
திருச்சி மாநகரம் ஸ்ரீரங்கம் அருகே யாத்ரிகா நிவாஸ் செக்போஸ்ட் அருகே டீக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த டீக்கடையில் நேற்று (ஜனவரி 8) தெய்வராஜன் டீ குடித்துக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ராஜ்குமார், தெய்வராஜன் சட்டையைப் பிடித்து கீழே தள்ளினார்.
அரிவாளை கையில் வைத்தபடி, “என்னடா பண்ணுவ, நாங்கள்ளாம் யாருன்னு நினைச்ச? அவ்வளவு பெரிய ஆளா நீ? சரிக்கு சமமா வேட்டியா கட்டுற” என்று தெய்வராஜன் நெஞ்சில் மிதித்தார்.
ராஜ்குமாருடன் சேர்ந்து வந்த மற்றொரு நபரும் முதியவர் தெய்வராஜன் நெஞ்சில் மிதித்தார். இதனால் வலி தாங்க முடியாமல் துடித்த தெய்வராஜன், “அய்யய்யோ யாரும் என்னை பார்க்க மாட்டீங்களா?” என்று சுற்றி இருந்த பொதுமக்களிடம் ஓலமிடுகிறார். ஆனால், யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை. “நான் அவ்வளவு பெரிய ஆள் இல்லை…. என்னை வேண்டுமானால் வெட்டிக்கொள்” என்று முதியவர் சொல்கிறார்.
ராஜ்குமார், “போலீசுக்கு போவியா? போ இங்க நாங்க தான் வெயிட்டு. எங்கள யாரும் ஒன்னும் பண்ண முடியாது. உன்ன வெட்டுனா எனக்கு தான் அசிங்கம்” என்று திமிராக தனது சாதி பெயரை சொல்லி தெனாவட்டாக பேசுகிறார். அப்போது அங்கு கூடியிருந்த பலரும் ராஜ்குமாரை தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்த்தபடி நிற்கின்றனர்.
இந்தநிலையில், பாதிக்கப்பட்ட தெய்வராஜன் ஸ்ரீரங்கம் காவல்நிலையத்தில் புகாரளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர் முரளியை தேடி வருகின்றனர்.
முதியவர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக நீலம் பண்பாட்டு மையம் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில், “சாதிய தீண்டாமை அவலம். வன்மையான கண்டனம். திருச்சி ஸ்ரீரங்கம் அருகே வயதான முதியவரை “சரிக்கு சமமா வேட்டியா கட்டுற” என்று சாதியைக் கூறி பெரியவரின் நெஞ்சின் மீது காலை வைத்து உன்னை வெட்டினால் யாரு வருவாங்க என்று சாதிவெறியோடு கொலை மிரட்டல் விடும் கயவர்களை வன்மையாக கண்டிக்கிறோம்.
காவல்துறை விரைந்து குற்றவாளிகள் அனைவரின் மீ்தும் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். மேலும்,பாதிக்கப்பட்ட முதியவருக்கு பாதுகாப்பு அளித்திட வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம்: எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு என்ன?
இதெல்லாம் எனக்கு தேவையா? விரக்தியில் நித்யா மேனன்- அழகான காரணம் இருக்கு!