திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் மற்றும் திமுக எம்.பி அருண் நேரு ஆகியோர் இடையே எக்ஸ் வலைதளத்தில் காரசாரமான விவாதம் நடைபெற்றுள்ளது.
திருச்சி மெட்ரோ திட்டத்திற்கு, ஆரம்பக்கட்ட சாத்தியக்கூறு அறிக்கையின் அடிப்படையில் ரூ.11,000 கோடி செலவாகும் என்று சென்னை அப்டேட்ஸ் என்ற எக்ஸ் வலைதள பக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இந்த செய்தியை மேற்கோள் காட்டி, காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், “திருச்சிக்கு மெட்ரோ ரயில் திட்டம் தேவையில்லை. இந்த மாபெரும் சிந்தனையற்ற திட்டத்தை நாம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அடிப்படை கட்டமைப்புகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
Trichy doesn’t need a metro. We need to end these grand unthinking projects. Focus on the basics. https://t.co/jIeqkOE8mn
— Karti P Chidambaram (@KartiPC) August 29, 2024
இதற்கு பதிலளித்த அருண் நேரு,
“எனது நாடாளுமன்றத் தொகுதி என்பது திருச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது. திருச்சி நகரின் மையப்பகுதியிலிருந்து ஊரகப் பகுதியை இணைக்கும் மெட்ரோ திட்டங்களின் அவசியத்தை மக்கள் பெரிதும் விரும்புகின்றனர்.
திருச்சி நகரம் வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது. இங்கு அதிகரித்து வரும் மக்கள் தொகை வளர்ச்சியை சமாளிக்க மெட்ரோ போன்ற நவீன உள்கட்டமைப்பு தேவை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
கார்த்தி சிதம்பரம்:
“உங்களுடைய கருத்தை நான் மதிக்கிறேன். இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் மெட்ரோ பயன்பாடு குறைவாகவே உள்ளது. 2022- 23-ஆம் நிதியாண்டில் சென்னை மெட்ரோவுக்கு ரூ.566 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 27 லட்சம் மக்கள்தொகையைக் கொண்ட திருச்சி நகரம் எப்படி மெட்ரோ சேவையை சமாளிக்கும்? மெட்ரோவை விட திருச்சிக்கு மற்ற அத்தியாவசியத் தேவைகள் உள்ளன, அவை முதன்மையானவை என்று நான் கருதுகிறேன்”
அருண் நேரு:
“உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான மெட்ரோ ரயில் திட்டங்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் இயக்கப்படவில்லை.
பொதுமக்களுக்கு எளிமையான பயணம், மக்கள் பரிமாற்றம் மற்றும் ஒட்டுமொத்த சமூகப் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
சென்னையில் மெட்ரோ திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை என்றால் அங்கு அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். மேலும், பொருளாதார இழப்பு நிச்சயமாக இருக்கும்.
கார்த்தி சிதம்பரம்:
“உள்கட்டமைப்பு வசதி என்பது நிதிப்பயன்பாடு சார்ந்த விஷயம் மட்டுமல்ல என்ற உங்களது கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
ஆனால், திருச்சி போன்ற சிறிய நகரங்களுக்கு, மக்கள்தொகை வளர்ச்சியை கணக்கில் கொண்டாலும், மெட்ரோ போக்குவரத்து பயன்தருமா?
மெட்ரோ சேவை அறிமுகப்படுத்தப்பட்ட மற்ற சிறிய நகரங்களின் அதன் செயல்பாடுகள் என்ன? வேறு ஏதேனும் பொதுப் போக்குவரத்து சிறப்பாகச் சேவையாற்றுகின்றனவா?
மெட்ரோ சேவை மட்டுமே ஒரே தீர்வல்ல. எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்துவதற்கு முன்பாக ஆலோசனை மேற்கொள்வது ஜனநாயகத்தில் மிகவும் ஆரோக்கியமான ஒரு விஷயமாகும்”
அருண் நேரு
“உங்களுடைய கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். மெட்ரோ மட்டுமல்ல பேருந்து, ரயில்கள், போன்ற சேவைகளையும் நாம் மேம்படுத்த வேண்டும்.
நகரப்பகுதிகளிலிருந்து ஊரகப்பகுதியை இணைப்பதில் மெட்ரோ சேவை சிறப்பாக செயல்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக நமது நகரங்கள் சிறப்பாக வளர்ச்சியடைந்து வருகின்றன. அதனால் மெட்ரோவின் தேவை என்பது மிகவும் முக்கியமானதாகும்” என்று தெரிவித்துள்ளார்.
திருச்சிக்கு மெட்ரோ சேவை வேண்டுமா வேண்டாமா என்று இரண்டு எம்.பி-க்களும் சமூக வலைதளத்தில் விவாதம் மேற்கொண்ட விஷயம் ஆரோக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விஜய்யின் ‘கோட்’…. நான்காவது சிங்கிள் எப்படி?
கோட் படத்தில் நடிக்க விஜய்க்கு 200 கோடி சம்பளம்… அர்ச்சனா கல்பாத்தி சொல்லும் ரகசியம்!