துபாய் விமான கண்காட்சியில் விபத்துக்குள்ளான தேஜஸ் விமானத்தை இயக்கிய விமானியின் உடலுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் இன்று காலை (நவம்பர் 23) அஞ்சலி செலுத்தி உள்ளார்.
துபாயில் இந்தியா உள்ளிட்ட 115 நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்ற விமான கண்காட்சி கடந்த நவம்பர் 17ஆம் தேதி தொடங்கியது. கண்காட்சியின் இறுதி நாளான நவம்பர் 21ஆம் தேதி பிற்பகல் 2.10 மணி அளவில் நடந்த சாகச நிகழ்ச்சியில் சூலூர் விமானப் படைத்தளத்தில் இருந்து சென்ற தேஜஸ் எம்.கே 1 இலகு ரக போர் விமானம் பங்கேற்றது.
சாகச நிகழ்ச்சியின் போது எதிர்பாராத விதமாக தேஜஸ் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தை இயக்கிய விமானி நமன்ஸ் சியால் உயிரிழந்தார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விபத்தில் உயிரிழந்த விமானி நமன்ஸ் சியால் சூலூர் விமானப்படை தளத்தில் சியான் குட் மார்னிங் கமாண்டராக பணியாற்றி வந்தார்.
இமாச்சலப் பிரதேசத்தின் தெஹ்ஸில் நக்ரோட்டா பக்வானில் உள்ள பாட்டியல்கர் கிராமத்தைச் சேர்ந்தவர் விமானி நமன்ஷ் சியால் ( 34), அவரது மனைவியும் இந்திய விமானப்படை அதிகாரியாக உள்ளார். தற்பொழுது விமானப்படை தொடர்பாக மேற்படிப்பு படித்து வருகிறார். அவர் 7 வயது மகள் தற்போது 2ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் உயிரிழந்த நமன்ஸ் சியால் உடல் நேற்று இரவு கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டு வரப்பட்டது. இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மற்றும் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து நமன்ஸ் சியால் உடல் அவரது சொந்த ஊரான இமாச்சலப்பிரேதசத்திற்கு விமானப்படை விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது.
