முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு, வீர் பூமியில் உள்ள அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மறைவை தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் 401 இடங்களை கைப்பற்றி இந்தியாவின் ஆறாவது பிரதமராக ராஜீவ் காந்தி பதவியேற்றார்.
1991 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையின் போது படுகொலை செய்யப்பட்டார்.
அவரது 33வது நினைவு தினம் இன்று (மே 21) அனுசரிக்கப்படுகிறது.
இதை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தி புகைப்படத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்திலும் காங்கிரஸ் சார்பில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
டெல்லி வீர் பூமியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப. சிதம்பரம் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், முன்னாள் பிரதமரும் தனது அப்பாவுமான ராஜீவ் காந்தியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, “உங்கள் கனவு என்னுடைய கனவு, உங்கள் ஆசை என்னுடைய பொறுப்பு… உங்கள் நினைவுகள் இன்றும் என்றென்றும் என் இதயத்தில்” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி தனது பக்கத்தில், ராஜீவ் காந்தி நினைவு நாளை முன்னிட்டு அவருக்கு எனது அஞ்சலி என்று கூறியுள்ளார்.
ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட நாளான மே 21, தீவிரவாத எதிர்ப்பு தினமாக ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…