ஹெல்த் டிப்ஸ்: செக்ஸின்போது தலைவலியா? அலட்சியப்படுத்த வேண்டாம்!

Published On:

| By Minnambalam Desk

ஒற்றைத் தலைவலி, டென்ஷன் தலைவலி, சைனஸ் தலைவலி… தலைவலியில் இப்படிப் பல வகைகள் இருப்பதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த நிலையில் தாம்பத்திய உறவின்போது ஏற்படும் தலைவலியை செக்ஸ் தலைவலி (Sex headaches) என்கிறார்கள் செக்ஸாலஜிஸ்ட்ஸ். Headaches During Sex

”செக்ஸ் தலைவலி என்பது தாம்பத்திய உறவில் ஈடுபடும்போது சிலருக்கு மெதுவாக ஆரம்பித்து, மெள்ள மெள்ள அதிகரிக்கலாம். சிலருக்கு இது உறவின்போது திடீரென்றும் வரலாம். இந்தத் தலைவலி, உறவுக்கு முன்பும் வரலாம், உறவுக்குப் பிறகும் வரலாம்…. உறவின் போதான உச்சக்கட்டத்தின் போதும் வரலாம். அதனால்தான் இதற்கு ‘ஆர்கஸம் ஹெட்டேக்’ (Orgasm headache) என இன்னொரு பெயரும் உண்டு.  இந்தத் தலைவலி, சில நிமிடங்கள் தொடங்கி, சில மணி நேரம் வரை நீடிக்கலாம்” என்று கூறுபவர்கள்…

“தாம்பத்திய உறவின்போது கழுத்து மற்றும் தலைப்பகுதியைச் சுற்றியுள்ள தசைகள் வழக்கத்தைவிட அதிக டென்ஷனுக்கு உள்ளாவதுதான் பிரதான காரணம்.  அடுத்து, உறவும், அதனால் ஏற்படும் பரவச உணர்வும் ரத்த அழுத்தத்தை திடீரென அதிகரிக்கலாம். அதனாலும் தலைவலி வரலாம். சிலருக்கு ஏற்கெனவே மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி இருக்கும். தாம்பத்திய உறவின்போது, ஒற்றைத் தலைவலி தூண்டப்படலாம்.

ஏற்கெனவே கழுத்து மற்றும் முதுகுத்தண்டு தொடர்பான பிரச்சினைகள் உள்ளவர்களுக்கும் தாம்பத்திய உறவின்போது தலைவலி வருவது இயல்புதான் என்றாலும் ஒவ்வொரு முறை தாம்பத்திய உறவின்போதும் இப்படி தலைவலி தொடர்ந்தால், மூளையில் ஏதேனும் பாதிப்பு உள்ளதா என்பதும் கவனிக்கப்பட வேண்டும்” என்று அறிவுறுத்துகிறார்கள்.

“இப்படி செக்ஸின்போது தாங்க முடியாத தலைவலி ஏற்பட்டால், உடனடியாக தாம்பத்திய உறவை நிறுத்த வேண்டும். உறவை நிறுத்தியதும் தலைவலி குறையும் வாய்ப்புகள் அதிகம். உறவுக்கு முன்பே தலைவலி ஆரம்பித்தால், மருத்துவர் பரிந்துரைத்த வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்ளலாம்.

தாம்பத்திய உறவு என்பது கலோரிகள் அதிகம் செலவாகும் ஒரு செயல். அதன் காரணமாக உடலில் நீர் வறட்சி ஏற்படும். நீர் வறட்சி ஏற்பட்டால் நிச்சயம் தலைவலி வரும். எனவே, அதைத் தவிர்க்க நிறைய தண்ணீர் குடியுங்கள். மேலும், தாம்பத்திய உறவின்போது வலி வரலாம் என்ற பயமிருந்தால், உறவில் நிதானமாக ஈடுபட வேண்டும்.

ஃபோர்பிளே எனப்படும் முன்விளையாட்டுகள், ரிலாக்‌ஷேசன் டெக்னிக்குகள் போன்றவற்றைப் பின்பற்றலாம். தலைவலி தொடர்ச்சியாக இருக்கிறது…. தாம்பத்திய உறவுக்குப் பிறகு இன்னும் அதிகரிக்கிறது என்றாலும் மருத்துவரைப் பார்க்க வேண்டிய அவசியம்” என்கிறார்கள். Headaches During Sex

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share