சாம்சங் தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்… டி.ஆர்.பி ராஜா வேண்டுகோள்!

Published On:

| By Selvam

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சாம்சங் தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா இன்று (அக்டோபர் 8) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் 1500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சங்கம் தொடங்க அனுமதி கோரி கடந்த நான்கு வாரங்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், சென்னை தலைமை செயலகத்தில் சிஐடியூ தலைவர் செளந்தரராஜன், சாம்சங் தொழிலாளர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் ஆகியோருடன் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா ஆகியோர் தொடர்ந்து பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு நேற்று (அக்டோபர் 7) செய்தியாளர்களிடம் பேசிய தா.மோ.அன்பரசன், போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் – சாம்சங் நிறுவனம் இடையே பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக தெரிவித்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்க சிஐடியூ தலைவர் முத்துக்குமார், சாம்சங் போராட்டம் தொடர்கிறது அமைச்சர் முன்பு நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்று தெரிவித்திருந்தார். இந்தசூழலில் தொழிலாளர்கள் இன்றும் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பி.ராஜா,  “போராட்டம் செய்யக்கூடிய தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கை, சிஐடியூ சங்கத்தை பதிவு செய்ய வேண்டும் என்று கேட்கிறார்கள். சிஐடியூ ரிஜிஸ்ட்ரேஷன் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. நீதிமன்ற தீர்ப்பிற்கு ஏற்ப அதில் நடவடிக்கை எடுக்கிறோம் என்று தொழிற்சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்தோம்.

அந்த ஒரு கோரிக்கையை தவிர மற்ற அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று சாம்சங் நிறுவனம் சார்பில் தெரிவித்துவிட்டார்கள். அந்த ஒரு கோரிக்கைகாக தான் இன்று மீண்டும் தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

5,000 ரூபாய் ஊதிய உயர்வு, 108 ஏசி பஸ்கள், கேண்டீனில் தரமான உணவு வழங்கப்படும் உள்ளிட்ட 14 கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக நிர்வாகம் தரப்பில் உறுதியளித்துள்ளனர்.  தொழிலாளர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிச்சயமாக பரிலீக்கப்படும்.  எனவே, தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விற்பனையாகாமல் நிற்கும் 7.9 லட்சம் கார்கள்…தடுமாற்றத்தில் டீலர்கள்!

14 புதிய தொழில் முதலீடு, 46,000 பேருக்கு வேலைவாய்ப்பு… அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share