ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம்… வெள்ளை அறிக்கை கேட்ட எடப்பாடி : பதிலடி கொடுத்த டி.ஆர்.பி.ராஜா

Published On:

| By Minnambalam Login1

trb rajaa

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மாதம் 27 ஆம் தேதி அமெரிக்கா சென்று 15 நாட்கள் அங்கே தங்கியிருந்து முதலீட்டாளர்களை சந்திக்க உள்ளார். trb rajaa

இந்தசூழலில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் அன்னிய முதலீடு மற்றும் தொழில் வளர்ச்சி குறித்து விமர்சித்து கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்

அதில் அவர் ” முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் 2020-2021ல் அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்த்தலில் 3-ஆவது இடத்தில் இருந்த தமிழகத்தை, 2022-23ல் 27.70 சதவீதம் குறைவாக அந்நிய முதலீட்டை ஈர்த்து, 8-ஆவது இடத்திற்கு பின்னுக்குத் தள்ளியதுதான் நிர்வாகத் திறனற்ற முதலமைச்சரின் சாதனை’ என்று சரியாக ஓராண்டிற்கு முன், அதாவது ஆகஸ்ட் 2023 அன்று நான் அறிக்கை மற்றும் பேட்டிகள் வாயிலாக தெரிவித்திருந்தேன். இதுகுறித்து வெள்ளை அறிக்கையும் வெளியிட வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலினை வலியுறுத்தி இருந்தேன். ஆனால், இதுவரை திமுக அரசு வெள்ளை அறிக்கை எதையும் வெளியிடவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நேற்று (ஆகஸ்ட் 7) இரவுஅறிக்கை வெளியிட்டிருக்கிறார். trb rajaa

” எதிர்க்கட்சித் தலைவர் 6-8-2024 அன்று, தமிழ்நாட்டில் அன்னிய முதலீடு மற்றும் தொழில் வளர்ச்சிக் குறித்த ஆதாரமற்ற, அடிப்படைப் புரிதல் இல்லாத, உள்நோக்கம் கொண்ட அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

தமிழ்நாடு முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த வெள்ளை அறிக்கையைக் கேட்டிருக்கிறார், இருண்ட ஆட்சியை வழங்கிய எதிர்க்கட்சித்தலைவர். மக்கள் நலனில் அக்கறை கொண்டு சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்கெடுத்து, எதிர்க்கட்சித் தலைவராகக் கூட அல்லாமல், ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருந்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியிருந்தாலே இது குறித்து நாம் கொடுத்திருந்த விளக்கத்தை அவர் கேட்டு அறிந்திருக்க முடியும்.

தமிழ்நாடு முதலமைச்சரின் திராவிட மாடல் ஆட்சியில் வரலாறு காணாத தொழில் வளர்ச்சியை தமிழகம் கண்டு வரும் நிலையில், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி மீது உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால், தமிழகத்தின் பெருமைகளை உலகத்திற்குப் பறைசாற்றும் வேலையை எதிர்க்கட்சித்தலைவர் செய்திருக்க வேண்டும்.

மாறாக, நமது தொழில்முனைவோர்களையும், அயராமல் உழைத்து வரும் நமது தொழிலாளர்களையும் கொச்சைப்படுத்தும் விதமாகவும், கட்சியில் தனது தற்காலிக பொதுச்செயலாளர் பொறுப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும் ஒன்றிய பா.ஜ.க.வின் குரலில் பேசி, தமிழர்களின் உண்மையான வளர்ச்சியில் அக்கறை இல்லாதவர் என்பதை நிரூபித்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்.

அவர், சேக்கிழார் எழுதிய கம்பராமாயணத்தை” சற்று கீழே வைத்துவிட்டு, பின்வரும் தகவல்களை அவரால் இயன்ற அளவுக்குப் படித்து புரிந்து  கொள்ள வேண்டும்.

2023-24ஆம் ஆண்டு ஒட்டுமொத்த இந்தியாவிலும் அன்னிய முதலீடு குறைந்தபோதிலும், தமிழ்நாட்டில் 12.3% முதலீடுகள் அதிகரித்திருக்கின்றன.

தான் சமீபத்தில் படித்த புத்தகத்தை உள்ளே வைத்துவிட்டு, தலைப்பை மறந்துவிட்டேன் என்று சொன்னதுபோல, அரசியல் விபத்தில் முதலமைச்சராகவும் இருந்த எதிர்க்கட்சித்தலைவர், தனது ஆட்சிக்காலத்தில் நாங்குநேரியிலும் ஓசூரிலும் செமி கண்டக்டர் பூங்காக்களை அமைத்தோம் என்ற பொய் மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார்.

நாங்குநேரியைப் பொருத்தவரை, அது  முரசொலி மாறனின்  பெருமுயற்சியால் கொண்டு வரப்பட்ட தொழிற்பூங்கா திட்டமாகும்.

ஒசூரில் முதன்முதலில் டி.வி.எஸ். நிறுவனத்தைக் கொண்டு போய் சேர்த்து, அங்கு தொழில்வளர்ச்சிக்கு வித்திட்டவரான கலைஞர் வழியில் நடக்கும் இந்த ஆட்சிதான். ஓசூருக்கு, தாங்கள் அறிவிக்க மறுத்த புதிய விமான நிலையத்தையும் இன்று அறிவித்து, ஓசூர் 2.0 வளர்ச்சியை உறுதி செய்திருக்கிறது

அண்மையில் ஜவுளித்துறைக்காக 6% வட்டி மானியம் உள்ளிட்ட 500 கோடி ரூபாய்க்கு மேலான பல ஊக்கத்திட்டங்களை அறிவித்திருக்கிறது திராவிட மாடல் அரசு.

ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் ஸ்பெயின் நாடுகளில் முதலமைச்சர் மேற்கொண்ட பயணங்கள் மூலம் மட்டும் 10,881.9 கோடி ரூபாய் முதலீடும், 17,371 வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

ஒட்டுமொத்தமாக கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் ஏறத்தாழ 10 இலட்சம் கோடி ரூபாய்க்கான முதலீடுகளை ஈர்த்து, 31 இலட்சம் நபர்களுக்கு மேல் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி, பரவலாக்கப்பட்ட வளர்ச்சியையும் உறுதி செய்து, தமிழ்நாட்டிற்குத் தனித்துவம் மிக்க பெருமைகளை முதல்வர் குவித்து கொண்டிருக்கிறார்.

தமிழ்நாடு, வெகுவிரைவில் 1 டிரில்லியன் டாலர் என்ற பொருளாதார இலக்கை எட்டுவது நிச்சயம். இனியேனும், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கைகள் விடுவதை நிறுத்திவிட்டு, தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சியைப் பார்த்து ஒரு தமிழனாகத் தாங்களும் பெருமை கொள்ளுங்கள்.”

என்று அந்த அறிக்கையில் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா குறிப்பிட்டிருக்கிறார்.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

நாக சைதன்யாவுக்கும், சோபிதாவுக்கு நிச்சியதார்த்தம்?

திடீரென்று ஏறிய தங்கம் விலை…..

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share