தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் TRB நடத்தும் முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு இன்று (அக்டோபர் 12) தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது. இந்த தேர்வை 2.36 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
தமிழ்நாட்டில் முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை I, கணினி பயிற்றுநர் நிலை 1 ஆகிய பணிகள் சார்ந்த 1,996 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம், கடந்த ஜூலை மாதம் 10-ந் தேதி வெளியிட்டது.
தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வணிகவியல், பொருளியல், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், கணினி அறிவியல் மற்றும் உடற்கல்வி ஆகிய 14 பாடங்கள் சார்ந்த 1,996 காலி பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த தேர்வை எழுத 2,36,530 லட்சம் பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர்.
இவர்களில் ஆண்கள்- 1,73,410; பெண்கள் 63,113; 3-ம் பாலினத்தவர் 7 பேர்; மாற்றுத் திறனாளிகள் 3,734 பேர்.
தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 809 தேர்வு மையங்களில் இன்று தேர்வு நடைபெறுகிறது.
இந்த தேர்வு தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட வழிகாட்டுதல்களில்,
- தேர்வு எழுதும் தேர்வர்கள் காலை 8.30 மணிக்குள் தேர்வு மையத்துக்கு வர வேண்டும்
- காலை 9.30 மணிக்கு தேர்வு மையத்தின் நுழைவாயில்கள் மூடப்படும்
- தேர்வர்கள் அடையாள சான்றாக ஆதார் அட்டை, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றில் ஒன்றை கொண்டு செல்ல வேண்டும்
- கறுப்பு மை பால் பாயிண்ட் பேனாவில் விடைத்தாளை பூர்த்தி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, புதிய பாடத் திட்டத்தின் படி ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது; இதனால் தேர்வுக்கு தம்மால் தயாராக இயலவில்லை; இதனை ஏற்று ஆசிரியர் தகுதித் தேர்வை ஒத்தி வைக்க கோரி மனுதாரர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
