பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகள் டிசம்பர் 16ஆம் தேதிக்கு பிறகு தமிழ்நாட்டில் இயங்க அனுமதிக்கப்படமாட்டாது என்று தமிழ்நாடு போக்குவரத்து துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம்னி பேருந்துகள் விழா காலங்களில் கொள்ளை கட்டணம் வசூலித்து வருகின்றன. கடந்த ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறை நாட்களின் போது தமிழ்நாடு போக்குவரத்து சார்பில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
இதில், 2500க்கும் மேற்பட்ட பேருந்துகள் விதி மீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. 125 பேருந்துகள் முடக்கப்பட்டன. இதில் 8க்கும் மேற்பட்ட பேருந்துகள் பிற மாநிலங்களில் பதிவானதாகும்.
652 பிற மாநில ஆம்னி பேருந்துகளால் தமிழ்நாடு அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 28.16 கோடி இழப்பு ஏற்படுகிறது எனவும் போக்குவரத்து துறை கூறுகிறது.
இந்நிலையில் இன்று (நவம்பர் 6) போக்குவரத்து ஆணையர் தலைமையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடந்தது .
ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் பாதியிலேயே ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வெளியேறினர்.
பின்னர் அனைத்து ஆம்னி பேருந்துகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மற்ற மாநிலங்களில் இன்று காலையில் பர்மிட் பெற்று மாலையில் பேருந்து ஓட்டலாம். ஆன்லைனில் பர்மிட் செய்துகொள்ள அனுமதியிருக்கிறது. தமிழ்நாட்டில் அந்த நடைமுறையில்லை. அதிகாரிகளை நேரில் பார்க்கவேண்டும். ஆன்லைனில் அதிகபடியான கட்டணம் வசூலிக்க முடியாது. ஆனால் நேரில் அதிகபடியான கட்டணம் வசூலிக்க முடியும். லஞ்சம் வாங்குகிறார்கள்” என்றனர்.
இந்தநிலையில், வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை டிசம்பர் 16க்கு பின் தமிழகத்தில் இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
ஆடாமலேயே ‘அவுட்’ ஆன மேத்யூஸ்… வைரலாகும் ‘கண்ணீர் புகைப்படம்!
