திருவாரூரில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த பயிற்சி மருத்துவர் இன்று (செப்டம்பர் 15) உயிரிழந்தார்.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 113 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளது என்று மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை சென்னையில் 4 வயது சிறுவனும் புதுச்சேரியில் 2 பெண்களும் என 3 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் கடலூர், கும்பகோணம், புதுக்கோட்டை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் காய்ச்சல் காரணமாக திருவாரூரில் பயிற்சி மருத்துவர் உயிரிழந்துள்ளார். கேரள மாநிலம் பசும்பாரா பகுதியைச் சேர்ந்தவர் பயிற்சி மருத்துவர் சிந்து. இவர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார்.
காய்ச்சல் ஏற்பட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிந்து இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ரத்த பரிசோதனை முடிவில் தான் பயிற்சி மருத்துவர் உயிரிழந்ததற்கான காரணம் தெரிய வரும்.
மோனிஷா
தோனியின் உலகக்கோப்பை சிக்ஸ்.. ஏலத்திற்கு வரும் வான்கடே இருக்கைகள்!
மின்கட்டண உயர்வு: திருப்பூரில் இருந்து முதல்வருக்கு பறந்த கடிதங்கள்!
