கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.5 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளார். Train-School Van Collision
கடலூரில் ரயில் விபத்து நிகழ்ந்த தகவல் கிடைத்தவுடன் முதலமைச்சர் ஸ்டாலின் அலுவலகத்தில் இருந்து தலைமை செயலாளரை தொடர்பு கொண்டு, விபத்து விவரங்கள் கேட்கப்பட்டன. அப்போது, நிதி உதவிக்கான தலா ரூ.5 லட்சம் காசோலையை தயார் செய்ய உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து கடலூர் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு தலைமை செயலாளர் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர், காசோலைகளைத் தயார் செய்து அதன் விவரங்களையும் தலைமை செயலருக்கு தெரியப்படுத்தினார். இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின், விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்து தலா ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்கிற அறிவிப்பை வெளியிட்டார்.
இதுபோன்ற விபத்துகளில் உயிரிழந்த குடும்பங்களுக்கு அரசு அறிவிக்கும் நிவாரண தொகைக்கான காசோலைகள் குறித்து கடந்த ஆட்சிக் காலங்களில் சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தன. இதனைத் தவிர்க்கும் வகையில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு வழங்கக் கூடிய காசோலைகளில் அரசு தரப்பு மிகுந்த கவனமாக செயல்பட்டது.
ரயில் விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு, திமுக கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் வேளாண்துறை அமைச்சருமான எம்.ஆர். கே பன்னீர்செல்வம், திமுக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும் தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான சிவி கணேசன் ஆகியோர் மூலம் நிதி உதவி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவி கணேசனுக்கு இன்று பிறந்த நாள். தமது வீட்டில் பெற்றோர் மற்றும் மறைந்த மனைவி ஆகியோரது படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு புறப்படும் போது இந்த ரயில் விபத்து குறித்த தகவல் கிடைத்தது.
இதனையடுத்து நெய்வேலி எம்.எல்.ஏ. சபா ராஜேந்திரனை அழைத்துக் கொண்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு விரைந்தார் அமைச்சர் சிவி கணேசன்.
இதனிடையே விழுப்புரம் சரக டிஐஜி உமா, கடலூர் எஸ்பி ஜெயக்குமார் உள்ளிட்டோர் விபத்து நடந்த இடத்துக்கு உடனடியாக விரைந்தனர். அங்கு கேட் கீப்பர் பங்கஜ் குமாரை சிலர் தாக்கிக் கொண்டிருந்த போது அவர்களைத் தடுத்து மீட்டனர்.
இந்த விபத்து தொடர்பாக ரயில்வே ஐஜி ஏஜி பாபு, விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
