கடலூர் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது விழுப்புரம்- மயிலாடுதுறை பயணிகள் ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். Train Accident Cuddalore
விழுப்புரம்- மயிலாடுதுறை இடையேயான பயணிகள் ரயிலில், கடலூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் மாணவர்களும் அதிகம் பயணிப்பது வழக்கம். இந்த ரயில் இன்று ஜூலை 8-ந் தேதி செவ்வாய்க்கிழமை காலை 7.40 மணிக்கு கடலூர் செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் பள்ளி வேன் 50 மீட்டர் தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்டது.

இந்த விபத்தில் பள்ளி வேனை ஓட்டி வந்த ஓட்டுநர் சங்கருக்கு லேசான சிறுகாயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளன.
பள்ளி வேனில்
1) நிமிலேஷ் (தொண்டமானத்தம்)
2) விமலேஷ் (தொண்டமானத்தம்)
3) சாருமதி ( சின்னகாட்டு சாகை, சுப்பிரமணியபுரம்)
4) செழியன் (சின்னகாட்டு சாகை, சுப்பிரமணியபுரம்)
ஆகிய மாணவர்கள் பயணித்தனர்.
இவர்களில் சாருமதி மற்றும் நிமிலேஷ் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர்.

ஒரே குடும்பத்தில் 2 மாணவர்கள் பலி
இவ்விபத்தில் படுகாயமடைந்த நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் சுயநினைவில்லாத நிலையில் செழியன் அனுமதிக்கப்பட்டார். சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சாருலதாவின் தம்பிதான் செழியன். தமது ஒரே மகளை இழந்துவிட்ட நிலையில் மகன் செழியனையாவது எப்படியாவது காப்பாற்றுங்கள் என மருத்துவர்களிடம் செழியனின் தந்தை திராவிடமணி காலில் விழுந்து கெஞ்சிய காட்சிகள் நெஞ்சை உலுக்குவதாக இருந்தன.
கடலூர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிய மாணவர் செழியனுக்கு இடதுபுற தொடையில் 10 தையல்கள் போடப்பட்டன. வலது புற தொடையில் மாவுக்கட்டு போடப்பட்டது. இடுப்பில் பெல்ட்டும் வைக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செழியன் உயிரிழந்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சாருமதி, செழியன் இருவரும் இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தனர்.

ஓடிவந்த எம்.எல்.ஏ. ஐயப்பன்
முன்னதாக கடலூர் அரசு மருத்துவனைக்கு விரைந்து வந்த எம்.எல்.ஏ. ஐயப்பன், மருத்துவர்களிடம் தேவையான மருந்துகள் உள்ளனவா? என கேட்டார். அப்படி மருந்துகள் தேவை எனில் உடனே ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார்.
அப்போது, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மாணவர் செழியனின் உடைகளை செவிலியர்கள் கழற்றிய போது தமது கையில் இருந்த பெரிய கர்ச்சீப்பைக் கொடுத்து உதவினார் எம்.எல்.ஏ. ஐயப்பன்.
கேட் கீப்பர் மீது தாக்குதல்
இந்த கோர விபத்துக்கு ரயில்வே கேட் கீப்பரான பங்கஜ் சர்மாதான் காரணம் என சிலர் அவரைத் தாக்கினர். பங்கஜ் சர்மா மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். பயணிகள் ரயில் வருவதை கவனிக்காமல் கேட் கீப்பர் தூங்கிவிட்டார் என சிலர் குற்றம்சாட்டுகின்றனர்.
டெக்னிக்கல் பழுது ஏற்பட்டதா?
ஆனால் ரயில்வே ஊழியர்களோ இதனை திட்டவட்டமாக மறுக்கின்றனர். கேட் கீப்பர் தூங்கி இருந்தாலும் ரெட் சிக்னல்தானே இருந்திருக்கும்; ரெட் சிக்னலை மீறி பயணிகள் ரயில் இயக்கப்பட்டதா? கேட் கீப்பரிடம் இருந்து சிக்னல் வராத நிலையில் எப்படி பயணிகள் ரயில் இயக்கப்பட்டது? கேட்டை பங்கஜ் சர்மா மூடும் போது ஏதேனும் டெக்னிக்கல் பழுது ஏற்பட்டிருக்க வேண்டும்.. அதனால்தான் இந்த விபத்து நிகழ்ந்திருக்க வேண்டும் என்கின்றனர். தற்போது ரயில்வே அதிகாரிகள் கடலூரில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ.5 லட்சம் உதவி- முதல்வர் ஸ்டாலின்
இந்த விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ5 லட்சம் நிதி உதவியை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதேபோல ரயில்வே நிர்வாகமும் தலா ரூ5 லட்சம் நிதி உதவியை அறிவித்துள்ளது.
கேட் கீப்பர் சஸ்பெண்ட்
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கேட் கீப்பர் பங்கஜ் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
