இந்தியா – நியூசிலாந்து இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவின் வளர்ச்சிக்கும், முதலீடுகளை அதிகரிக்க உதவியாகவும் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே ஒரு முக்கிய வர்த்தக ஒப்பந்தம் (FTA) கையெழுத்தாகி உள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவை வலுப்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், முதலீடு மற்றும் ஒத்துழைப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் சந்தை அணுகலை மேம்படுத்தும் எனவும், முதலீடுகளை ஊக்குவிக்கும் எனவும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், வணிகர்கள், விவசாயிகள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs), கண்டுபிடிப்பாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும்.
இந்த வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் கடந்த மார்ச் 2025 மாதம் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் இந்தியா வந்தபோது தொடங்கின. வெறும் ஒன்பது மாதங்களில் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இது இரு நாடுகளின் வலுவான அரசியல் விருப்பத்தையும், உறவை விரிவுபடுத்தும் நோக்கத்தையும் காட்டுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் இரட்டிப்பாகும் என்று இரு நாடுகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளன. நியூசிலாந்து அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 20 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தியா-நியூசிலாந்து உறவு புதிய உயரங்களை எட்டும் என்று அவர் கூறியுள்ளார். இந்த வர்த்தக ஒப்பந்தம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்க வழிவகுக்கும் என்றும், பல்வேறு துறைகளில் நியூசிலாந்திலிருந்து 20 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான முதலீட்டை இந்தியா வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் திறமையான இளைஞர்கள், துடிப்பான ஸ்டார்ட்அப் சூழல் மற்றும் சீர்திருத்தங்களை மையமாகக் கொண்ட பொருளாதாரம் ஆகியவை புதுமை, வளர்ச்சி மற்றும் நீண்டகால கூட்டாண்மைக்கு வலுவான அடித்தளத்தை வழங்குகின்றன என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
விளையாட்டு, கல்வி மற்றும் கலாச்சார தொடர்புகள் போன்ற துறைகளிலும் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு தொடர்ந்து வலுப்பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு ஒரு முக்கிய தருணம் என்றும், வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளுக்கு ஒரு வலுவான உத்வேகத்தை அளிக்கிறது என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
அவர் மற்றும் கிறிஸ்டோபர் லக்ஸன் இந்த ஒப்பந்தம் கையெழுத்தான சிறிது நேரத்திலேயே ஒரு நல்ல உரையாடலை நடத்தியதாகவும், வெறும் ஒன்பது மாதங்களில் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது, வலுவான அரசியல் விருப்பத்தையும், பொருளாதார உறவுகளை ஆழமாக்குவதற்கான பகிரப்பட்ட நோக்கத்தையும் பிரதிபலிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வர்த்தக ஒப்பந்தம் மேம்பட்ட சந்தை அணுகலை உறுதி செய்கிறது. மேலும், முதலீட்டுப் பாய்ச்சலை ஆழமாக்குகிறது. கண்டுபிடிப்பாளர்கள், தொழில்முனைவோர், விவசாயிகள், MSMEs, மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை உருவாக்குகிறது என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
