ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் அத்தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு, அதிமுக சார்பில் பிரேம்குமார், பாஜக கூட்டணியில் தமாகா சார்பில் வேணுகோபால், நாதக சார்பில் ரவிச்சந்திரன் ஆகியோர் போட்டியிட்டனர்.
இன்று (ஜூன் 4) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட குரோம்பேட்டையில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவின் காருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேர்தல் அலுவலர் அபிசேக் சந்திராவிடம், டி.ஆர்.பாலு முறையீடு செய்தார்.
“வாக்குச்சாவடி முகவர்களுக்கான போதுமான வசதிகள் வாக்கு எண்ணும் மையங்களில் செய்யப்பட்டுள்ளதா? வேட்பாளர்களின் வாகனங்களை உள்ளே அனுமதிப்பதில் என்ன பிரச்சனை உள்ளது.
என்னதான் பிரச்சனை என்று ஒரு சாமானிய மனிதனாக நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன்” என டி.ஆர்.பாலு தேர்தல் அலுவலரிடம் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய தேர்தல் அலுவலர் அபிசேக் சந்திரா, “வாகனங்கள் உள்ளே வர அனுமதி உண்டு. உள்ளே வரும் வாகனங்களுக்கான அனுமதி சீட்டு வைத்திருக்க வேண்டும். அனுமதி சீட்டு வைத்திருப்பவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்” என்று விளக்கமளித்தார்.
தொடர்ந்து, “என்னிடம் அனுமதி சீட்டு உள்ளது. இருந்தும் எனது கார் உள்ளே அனுமதிக்கப்பட வில்லை. என்னால் நடக்க முடியாது. எனது கால்களில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. என்னால் இவ்வளவு தூரம் நடக்க முடியாது. ஆனால், கார் அங்கேயே நிறுத்தப்பட்டதால், அங்கிருந்து சிரமப்பட்டு நடந்து வந்தேன். கார் உள்ளே செல்ல அனுமதி இல்லை என்று சொல்வது நன்றாக இல்லை” என டி.ஆர்.பாலு, அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
தேர்தல் அலுவலர் அங்கிருந்த காவல்துறையினரிடம் டி.ஆர்.பாலு கார் அனுமதிக்கப்படாததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டார்.
அந்த விசாரணையில், அவர் மாற்று வழியில் வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைந்ததாகவும், அதனால் வாகனம் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்றும் காவல்துறையினர் விளக்கமளித்தனர்.
தொடர்ந்து டி.ஆர்.பாலுவிடம் அபிசேக் சந்திரா, “வாகனங்கள் உள்ளே வர ஒரு வழி தனியாக உள்ளது. மாற்று வழியில் வந்ததால் தான் வாகனம் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.” என விளக்கம் அளித்தனர்.
பின்னர், டி.ஆர்.பாலு நடந்தே வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்றார்.
வாக்கு எண்ணிக்கையில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு முன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
20/39 – திமுக கூட்டணி முன்னிலை … தற்போதைய நிலவரம்!
தருமபுரி : முதல் சுற்றில் செளமியா அன்புமணி முன்னிலை… பாமகவினர் குஷி!