கே.ஜி.எஃப் (KGF) படங்களுக்குப் பிறகு, இந்திய திரையுலகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த ‘ராக்கி பாய்’ யஷ்ஷின் அடுத்த அதிரடி வரவு ‘டாக்சிக்’ (Toxic). நேற்று (ஜனவரி 8) யஷ்ஷின் 40-வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியான இப்படத்தின் டீசர், இணையத்தையே ஒரு கலக்கு கலக்கி வருகிறது. “இனி ஆட்டம் வேற லெவல்ல இருக்கும்” என்று சொல்லும் அளவுக்கு, டீசரில் யஷ்ஷின் புதிய அவதாரத்தைப் பார்த்துப் பிரபலங்கள் பலரும் மிரண்டு போயுள்ளனர்.
டீசர் எப்படி? மயானத்தில் நடக்கும் இறுதிச் சடங்கு, அதைச் சுற்றி வளைக்கும் துப்பாக்கி ஏந்திய அடியாட்கள்… அந்தச் சத்தத்தை மீறி ஒரு கார் வந்து நிற்கிறது. உள்ளே ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் யஷ், சிகரெட் புகைக்கு நடுவே ‘ராயா’ (Raya) என்ற கதாபாத்திரமாக வெளிப்படுகிறார். கையில் மெஷின் கன், வாயில் சுருட்டு என அவர் வந்து இறங்கி, “டேடி இஸ் ஹோம்” (Daddy is Home) என்று சொல்லும் காட்சி, ரசிகர்களுக்கு கூஸ்பம்ப்ஸ் மொமெண்ட்!
பிரபலங்களின் ரியாக்ஷன்: இந்த டீசரைப் பார்த்த திரையுலகப் பிரபலங்கள், தங்கள் ஆச்சரியத்தை சமூக வலைதளங்களில் கொட்டித் தீர்த்துள்ளனர்.
ஆலியா பட் (Alia Bhatt): பாலிவுட் முன்னணி நடிகை ஆலியா பட், டீசரைப் பார்த்துவிட்டு ஒரே வார்த்தையில் “டைனமைட்” (Dynamite) என்று நெருப்பு எமோஜிகளுடன் பதிவிட்டுள்ளார்.
கரன் ஜோஹர் (Karan Johar): பிரபல இயக்குநர் கரன் ஜோஹர், “வாவ்! என்ன ஒரு பிறந்தநாள் அறிவிப்பு இது! உண்மையாகவே ராக்கிங்!” என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.
சந்தீப் ரெட்டி வங்கா (Sandeep Reddy Vanga): ‘அனிமல்’ பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா, “டாக்சிக் டீசர் என்னை அப்படியே நிலைகுலைய வைத்துவிட்டது. ஸ்டைல், ஆட்டிட்யூட், குழப்பம் (Chaos) எல்லாம் கலந்த மிரட்டல்” என்று ட்வீட் செய்துள்ளார்.
ராம் கோபால் வர்மா (Ram Gopal Varma): ஒரு பெண் இயக்குநரான கீது மோகன்தாஸ் (Geetu Mohandas) இவ்வளவு ஆக்ரோஷமான படத்தை இயக்கியிருப்பதைப் பார்த்து வியந்த ஆர்.ஜி.வி, “எந்த ஆண் இயக்குநராலும் இவருக்கு ஈடுகொடுக்க முடியாது. பெண் அதிகாரத்தின் உச்சக்கட்ட அடையாளம் இவர்” என்று பாராட்டியுள்ளார்.
சாதனைப் பார்வை: வெளியான 24 மணி நேரத்திற்குள் 200 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று, இந்திய அளவில் ஒரு புதிய சாதனையை இந்த டீசர் படைத்துள்ளது. “ஹாலிவுட் தரத்தில் மேக்கிங் உள்ளது” என்று நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.
படம் எப்போது? கீது மோகன்தாஸ் இயக்கத்தில், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கும் இப்படம், வரும் மார்ச் 19, 2026 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. பாக்ஸ் ஆபீஸில் ஒரு பெரும் புயல் வீசப்போவது மட்டும் உறுதி!
