ADVERTISEMENT

யானைகள் நடமாட்டம்: கொடைக்கானல் வனத்துறை சுற்றுலாத் தலங்கள் மூடல்!

Published On:

| By Monisha

Tourists banned entry into Berijam Lake in Kodaikanal

யானைகள் நடமாட்டத்தால் கொடைக்கானல் வனத்துறைக்கு கட்டுப்பட்ட அனைத்து சுற்றுலாத் தலங்களையும் மூடி, பொதுமக்கள் பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மோயர் பாயின்ட், தூண் பாறை, பைன் ஃபாரஸ்ட், குணா குகை, பேரிஜம் ஏரி உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்கள் உள்ளன. இதில் பேரிஜம் ஏரிக்கு செல்ல வனத்துறையிடம் சிறப்பு அனுமதி பெற்று செல்ல வேண்டும்.

ADVERTISEMENT

கடந்த 11ஆம் தேதி காட்டு யானைகள் பேரிஜம் வனப்பகுதியில் முகாமிட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் இந்தப் பகுதியில் உள்ள தொப்பி தூக்கும் பாறை, அமைதி பள்ளத்தாக்கு, பேரிஜம் ஏரி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல வனத்துறை தடை விதித்திருந்தது.

யானைகளைக் கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தாலும் பேரிஜம் வனப்பகுதியில் கடந்த எட்டு நாட்களாக சுற்றித்திரியும் யானைகளை விரட்ட முடியவில்லை.

ADVERTISEMENT

Tourists banned entry into Berijam Lake in Kodaikanal

ஒரு வாரமாக முகாமிட்டுள்ள யானைகளால் வார விடுமுறை, தொடர் விடுமுறை நாட்களில் கொடைக்கானலுக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் பேரிஜம் வனப்பகுதிக்குள் செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் மோயர் பாயின்ட் பகுதியில் வந்த யானைகள் அங்கிருந்த சாலையோர கடைகளின் முன்பகுதியை அடித்து நொறுக்கி சேதப்படுத்தின.

நேற்று காலையில் கடைக்கு வந்த வியாபாரிகள் கடை சேதமடைந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கடைகளை சேதப்படுத்தியது யானைகள்தான் என உறுதி செய்தனர்.

வனப்பகுதியில் சுற்றித்திரிந்த யானைகள் தற்போது வியாபார கடைகளையும் சேதப்படுத்தியதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்தனர்.

இதனால் வனத்துறைக்கு கட்டுப்பட்ட அனைத்து சுற்றுலாத் தலங்களையும் பார்வையிட நேற்று முதல் தடை விதித்து உத்தரவிடப்பட்டது. இதனால் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இதுகுறித்து பேசியுள்ள வியாபாரிகள், “வனத்துறையினரின் மெத்தனத்தால்தான் யானைகள் எங்களுடைய கடைகளை சேதப்படுத்தியுள்ளது. முறையாக யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்டியிருந்தால் கடைகள் பாதுகாப்பாக இருந்திருக்கும். சேதத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்” என்று கூறினர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், “யானைகள் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து, வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்” என்று கூறியுள்ளனர்.

ராஜ்

கிச்சன் கீர்த்தனா: ஸ்வீட் பச்சைப்பயறு

மோகன்லாலின் மலைக்கோட்டை வாலிபன்: ரிலீஸ் எப்போது?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share