ADVERTISEMENT

நீலகிரியில் இயல்பு நிலைக்கு திரும்பிய சுற்றுலா தலங்கள்!

Published On:

| By Minnambalam Desk

Nilgiris Rain

கன மழை காரணமாக நேற்று நீலகிரி பகுதியில் வனத்துறை சுற்றுலா தலங்கள் மூடப்பட்ட நிலையில் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நேற்று காலை முதல் ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை கொட்டி வந்தது.

பலத்த காற்றுடன் பெய்த கன மழையால் குன்னூர் பகுதியில் மரம் விழுந்ததில் கார் ஒன்று சேதம் அடைந்துள்ளது. மேலும் பைக்காரா அணையின் முழு கொள்ளளவான 100 அடியை எட்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி நேற்று முதல் மூன்று மதகுகளில் வினாடிக்கு 200 கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் கனமழை காரணமாக ஊட்டியில் உள்ள அவலாஞ்சி, பைன் மரக்காடு, எட்டாவது மைல் டிரீ பார்க், மரவியல் பூங்கா ஆகிய சுற்றுலா தலங்கள் நேற்று மூடப்பட்டிருந்தன. அந்தந்த வட்டத்தில் வருவாய் துறையினர் பேரிடர் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று ஜூலை 20-ந் தேதி காலை முதல் பெரிய அளவில் மழை இல்லாமல் இதமான சூழல் நிலவி வருகிறது. இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் வரத்தும் அதிகரித்து வருவதால் நேற்று மூடப்பட்டிருந்த சுற்றுலா தலங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளது. ஆனால் மழை பாதிப்பு அதிகரித்தால் மீண்டும் சுற்றுலா தலங்களை மூட வாய்ப்புகள் உள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share