சசிகுமார், சிம்ரன் ஜோடியின் ‘அட்ராசிட்டி’ எப்பூடி..!? Tourist Family Movie Review 2025
மிக மெலிதான திரைக்கதை கொண்ட படங்களுக்குத் தமிழ்நாட்டு ரசிகர்கள் வரவேற்பு தருவார்களா? திரையுலகக் கலைஞர்களை வாட்டி வதைக்கிற கேள்விகளுள் இதுவும் ஒன்று. அதனாலேயே, மிக லேசான கதையைக் கொண்ட ரொமான்ஸ், காமெடி, ட்ராமா வகைமை திரைப்படங்களை எடுக்கப் பலரும் தயக்கம் காட்டுகின்றனர். அவற்றின் மீது கவனத்தைக் குவிக்கிற வகையில் ‘வித்தியாசங்களை’ப் புகுத்தக் கஷ்டப்படுகின்றனர். ‘நல்லதா ஒரு பின்னணி கிடைச்சா அதெல்லாம் ஒரு விஷயமே இல்ல’ என்கிற பதிலோடு, மிகச்சிலர் மட்டும் அந்த ‘ரிஸ்க்’கை ‘ரஸ்க்’ சாப்பிடுவது போலக் கையாண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் மேலுமொன்றாகச் சேர்ந்திருக்கிறது ‘டூரிஸ்ட் பேமிலி’ படக்குழு.
புதுமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந் இயக்கியிருக்கிற இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். Tourist Family Movie Review 2025
முதன்முறையாக சசிகுமார் உடன் சிம்ரன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார். இவர்களோடு மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகிபாபு, ரமேஷ் திலக், பக்ஸ், இளங்கோ குமரவேல், எம்.எஸ்.பாஸ்கர், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் சசிகுமார், சிம்ரன் ஜோடியின் ‘அட்ராசிட்டி’ எவ்வாறு இருக்கிறது?
பிழைப்பு தேடி..! Tourist Family Movie Review 2025

இலங்கையின் வல்வெட்டித் துறையில் இருந்து ராமேஸ்வரத்திற்குச் சட்டவிரோதமாகப் படகில் வருகிறது ஒரு குடும்பம். தர்மதாஸ் (சசிகுமார்) எனும் நபர், அவரது மனைவி வசந்தி (சிம்ரன்), நிதுஷன் (மிதுன் ஜெய்சங்கர்), முள்ளி (கமலேஷ்) என்று நான்கு பேர் வந்திறங்கியதுமே, கடலோரப் பாதுகாப்புக்காக ரோந்து வரும் போலீசார் அவர்களைச் சுற்றி வளைக்கின்றனர். அவர்களை அழைத்துச் செல்ல வந்த வசந்தியின் சகோதரர் (யோகிபாபு) போலீசாரை பார்த்ததும் ஒரு படகில் மறைந்து கொள்கிறார். அவரையும் பிடிக்கின்றனர்.
ஐவரையும் கைது செய்து வேனில் அழைத்துச் செல்கிறார் கான்ஸ்டபிள் பைரவன் (ரமேஷ் திலக்). செல்லும் வழியில், சிறுவன் முள்ளி கையில் இருக்கிற நாய்க்குட்டியைப் பார்க்கிறார். ‘எப்படியும் எங்களை ஜெயில்ல போட்டுடுவீங்க. இதுக்காவது நல்ல சாப்பாடு கிடைக்கட்டும். நீங்க எடுத்துகிட்டு போய் வளர்த்துடுங்க’ என்று பைரவனிடம் சொல்கிறார் முள்ளி. கூடவே, ‘எனது பெயர் ஆகாஷ்’ என்கிறார். அது பைரவனின் மகன் பெயர்.
முள்ளி சொல்லும் பொய்யை உண்மை என்று நம்பும் பைரவன், கொஞ்சமாக ‘மெல்ட்’ ஆகிறார். அவர்களை பாதி வழியில் இறக்கிவிட்டு சக போலீசாரோடு சென்றுவிடுகிறார். ஆனால், பைரவனோடு இருப்பவர்களால் இதனை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.
என்னதான் முள்ளி பொய் சொல்லித் தப்பிக்க வைத்தாலும், அதனை தர்மதாஸால் ஏற்க முடிவதில்லை. அவரிடத்தில் இருக்கிற உண்மையும் நேர்மையும் அப்படியேதான் இருக்கின்றன என்பதை அடுத்தடுத்து நடக்கிற விஷயங்கள் நிரூபிக்கின்றன.
சென்னைக்குப் பயணிக்கும் அவர்கள், அங்கு ஒரு வீட்டில் தங்க முடிவெடுக்கின்றனர். இறங்கிய இடத்தில், சாலையில் மயங்கிக் கிடக்கிற ஒரு இளைஞரைப் பார்த்ததும் ஓடிச் செல்கிறார் தர்மதாஸ். அவரது நிலை கண்டு பதறி, உடனே ஆம்புலன்ஸுக்கு அழைப்பு விடுக்குமாறு கூறுகிறார். அவரது உறவினரும் வேண்டாவெறுப்பாக அதனைச் செய்கிறார். கேசவநகர் காலனியில் தர்மதாஸ் குடும்பத்தினரைக் குடி வைக்கிறார்.
’இந்த ஊர் பாஷை பழகற வரைக்கும் யார்கிட்டயும் வாய் திறக்காதீங்க’ என்பது வசந்தியின் சகோதரர் அக்குடும்பத்தினருக்குத் தரும் அறிவுரை. ஆனால், அவர்களால் அதனைப் பின்பற்ற முடிவதில்லை. Tourist Family Movie Review 2025
அதனால் என்னென்ன சம்பவங்கள் நிகழ்கின்றன? அதன் தொடர்ச்சியாக, தர்மதாஸ் குடும்பத்தின் என்ன மாற்றங்கள் உருவாகின்றன என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.
இந்தக் கதையின் தொடக்கத்தில், ஒரு குப்பை தொட்டியில் இருந்த குண்டு வெடித்து ஊடகங்களில் ‘பரபரப்புத் தீ’ பற்றிக் கொள்வதாகக் காட்டப்பட்டிருக்கும். ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்குக் கிளம்புகையில், அந்த இடத்தில்தான் தர்மதாஸ் குப்பையைக் கொட்டியிருப்பார். அதன் தொடர்ச்சியாக, அவர் மீது போலீசாரின் ‘சந்தேகப்பார்வை’ விழுவது இத்திரைக்கதையின் ஊடே ‘கிளைக்கதையாக’ச் சொல்லப்பட்டிருக்கும்.
இப்படிச் சில முடிச்சுகள் ஆங்காங்கே இருப்பதுதான், ஒரு மெல்லிய நீரோடை போன்று நகர்கிற திரைக்கதையில் ஏற்ற இறக்கங்களுக்குக் காரணமாகின்றன. படத்தை சுவாரஸ்யப்படுத்துகின்றன. Tourist Family Movie Review 2025
கலக்கும் ‘காஸ்ட்டிங்’! Tourist Family Movie Review 2025

சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் என்று நான்கு பேரையும் ஒரு குடும்பமாகத் திரையில் காட்டிய விதத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் அபிஷன் ஜீவிந். ‘அவர்கள் நால்வரும் ஒரு குடும்பம்தானோ’ என்று எண்ணுகிற அளவுக்கு, அவர்களிடையேயான ‘கெமிஸ்ட்ரி’ திரையில் தெரிகிறது. அதுவே இப்படத்தின் வெற்றி.
சசிகுமார் – சிம்ரன் ஜோடி ‘அட்ராசிட்டி’ என்று சொல்கிற அளவுக்குப் பெரியளவில் காட்சிகள் இல்லை. ஆனாலும், அப்பாத்திரங்களின் அன்னியோன்யத்தை, கருத்து வேறுபாடுகளை, உணர்வுக் கொந்தளிப்புகளைக் காட்டுகிற வகையில் சில காட்சிகள் இருக்கின்றன. அவை கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த உதவியிருக்கின்றன.
இப்படத்தில் இருவருமே நடுத்தர வயது மனிதர்களாகத் தோன்றியிருக்கின்றனர். அவர்களுக்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் மிதுன், கமலேஷ் பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கின்றன. Tourist Family Movie Review 2025
‘விளையாட்டுப் பையன்’ என்றளவில் கமலேஷுக்கு ‘மைலேஜ்’ ஏற்றப்பட்டிருப்பதற்கு இணையாக, ‘கொஞ்சம் பக்குவமான இளைஞன்’ எனும் பிம்பத்திற்குப் பொருத்தமான காட்சிகள் மிதுனுக்குத் தரப்பட்டிருக்கின்றன.
அதிலும், தான் காதலிக்குக் கல்யாணம் என்ற உண்மையைத் தாங்க முடியாமல் பிதற்றுகிறபோது அக்குடும்பம் அவரைத் தேற்றுவதாக ஒரு ‘காட்சி’ வருகிறது. ’கமர்ஷியல் படம்னா இப்படியும் இருக்கும்’ என்பதற்கான உதாரணமாக, அக்காட்சி கைத்தட்டல்களை அள்ளுகிறது. Tourist Family Movie Review 2025
இந்த படத்தில் யோகிபாபு, பக்ஸ், எம்.எஸ்.பாஸ்கர், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி, ரமேஷ் திலக், யோகலட்சுமி உட்படச் சுமார் ஒன்றரை டஜனுக்கும் மேற்பட்டோர் இதில் நடித்திருக்கின்றனர். குடியிருப்புவாசிகளாகச் சிலர் வந்து போயிருக்கின்றனர். அவர்களுக்கும் இத்திரைக்கதையில் வேண்டிய அளவுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. Tourist Family Movie Review 2025
விசாரணை மேற்கொள்ளும் ஐபிஎஸ் அதிகாரியாக வருபவரும் கூட, ‘யார் இவர்’ என்று கேட்கிற அளவுக்குத் திரையில் தோன்றியிருக்கிறார்.
ஆதலால், சந்தேகமேயிலாமல் இப்படத்தின் வெற்றியை உறுதிப்படுத்துவதில் ‘காஸ்ட்டிங்’ மிக முக்கியப் பங்காற்றியிருக்கிறது. போலீஸ் அதிகாரியாக வரும் அஜித் கோஷி தவிர்த்து, மற்றனைவரையும் வேறெந்தப் படங்களிலும் இது போன்ற பாத்திரங்களில் பார்த்திருக்க முடியாது எனும் அளவுக்கு ‘அது’ அமைந்திருக்கிறது.

ஒரு ஐரோப்பிய படம் பார்த்தது போன்ற உணர்வைத் தனது ‘பளிச்’ பிரேம்களால் ஏற்படுத்தியிருக்கிரார் ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாதன். கதாபாத்திரங்களுக்கும் காட்சிப் பின்னணிக்கும் ஏற்ற கலை வடிவமைப்பைக் கையாண்டிருக்கிறார் கலை இயக்குனர் ராஜ்கமல். Tourist Family Movie Review 2025
சிரிப்பதற்கு இடம் தந்து காட்சிகளைச் சரியான வேகத்தோடு நகரும் வகையில் நறுக்கியிருக்கிறார் படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன்.
படத்தில் ஆடை வடிவமைப்பு, ஒப்பனை, ஒலி வடிவமைப்பு, நிறக்கலவை என்று பல அம்சங்கள், இயக்குனரின் கதை சொல்லலைத் தாங்கிப் பிடித்திருக்கின்றன.
ஷான் ரோல்டனின் இசையமைப்பில் பாடல்கள் முதன்முறையாகக் கேட்கிறபோதே மனதோடு ஒட்டிவிடுகின்றன. பின்னணி இசையானது காட்சிகளின் தன்மையை மேலுயர்த்துகிற வகையில் அமைந்திருக்கின்றன.
இப்படி ‘டூரிஸ்ட் பேமிலி’யில் இடம்பெற்ற நடிப்பு மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருமே ஒருங்கிணைந்து செயல்பட்டு, இயக்குனர் அபிஷன் ஜீவிந் விரும்பிய உலகைப் படைத்திருக்கின்றனர்.
கடினமான பின்னணியைக் கொண்ட கதாபாத்திரங்கள். சோகத்தில் உழல வேண்டிய அவர்களது எண்ணங்களும் செயல்பாடுகளும் வேறொரு திசையில் இருக்கிறது. அவர்களால் அவர்களது வாழ்வு மட்டுமல்லாமல், சுற்றியிருப்பவர்களின் வாழ்க்கையும் நல்மாற்றங்களுக்கு உள்ளாவதை, ‘ஓவர் மெலோட்ராமா’வாக இல்லாமல் சுவைபடச் சொல்லியிருக்கிறார் இயக்குனர். அதுவே இப்படத்தின் யுஎஸ்பி.
’ஆல்தோட்ட பூபதி’ பாடலுக்கு சிம்ரன் ஆடுவது, மிதுனிடம் யோகலட்சுமி தனது காதலை சூசகமாக வெளிப்படுத்துவது, சசிகுமார் பாத்திரத்தினால் உண்டான மாற்றங்களை இயக்குனர் அபிஷன் பாத்திரம் விவரிப்பது என்று ‘டூரிஸ்ட் பேமிலி’யில் ரசிக்கத்தக்க காட்சிகள் கணிசமாக உள்ளன. அவை இப்படத்தைக் காண வந்ததை அர்த்தமுள்ளதாக்குகின்றன.
அவற்றைத் தாண்டி, இலங்கை போர் தொடர்பான விஷயங்களை இதே கதையில் இடம்பெறச் செய்து, உலகெங்கும் வாழ்கிற தமிழ் மக்கள் மனதைத் தொடுகிற திரையனுபவத்தை, இப்படம் மூலம் தந்திருக்கலாமே என்பது போன்ற ஆதங்கங்கள் சிலருக்கு எழலாம். Tourist Family Movie Review 2025

அதற்கு மாறாக, இயக்குனரின் பார்வை அமைந்திருப்பது நிச்சயம் தவறு அல்ல. அது மட்டுமல்லாமல், எவரையும் குறைத்துச் சொல்வது போன்ற சித்தரிப்பை இதில் அவர் கையாளவில்லை. ஆதலால், அது போன்ற குறைகளும் லாஜிக் மீறல்களும் கூடப் புறக்கணிக்கத்தக்கதாகவே இருக்கின்றன.
பின்பாதியில் ஓரிடத்தில் ‘கணவன் மனைவி தாம்பத்திய உறவு’ பற்றி ‘கமெண்ட்’ அடிப்பது தவிர, இப்படத்தில் ‘ஆபாசமான’ விஷயங்கள் என்று எதுவுமில்லை. குறிப்பிட்ட ‘அந்த’ வசனங்கள் கூட, இன்றைய மொபைல் உலகில் சர்வசாதாரணமானதுதான்.
ஆகையால், குடும்பத்தோடு சேர்ந்து சிரிக்கிற, ரசிக்கிற வகையில் ‘டூரிஸ்ட் பேமிலி’ இருக்கிறது. இப்படிப்பட்ட கதை சொல்லலோடு ‘கமர்ஷியல் படங்கள்’ உருவாக்கப்படுவது நமது ரசனையின் கிளைகளை மேலும் விரிவடையச் செய்யும்.
‘கமர்ஷியல் படங்கள்’ என்ற போர்வையில் ரத்தத்தையும் சத்தத்தையும் தியேட்டரில் வாரியிறைத்து அடுத்த தலைமுறையின் மூளையை ‘மடத்தனத்தால்’ நிரப்புவதற்கு, இது எவ்வளவோ தேவலை..!
