கோவை மாவட்டம், ஈஷா யோகா மையத்தில் சுற்றுலாப் பயணி ஒருவர் தற்கொலை செய்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம், ஈஷா யோகா மையத்தில் ஆண் சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக, ஆலந்துறை காவல் நிலையத்தில் பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) பிரிவு 194-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவையில் கடந்த 07.06.2026 அன்று மாலை 6.50 மணி முதல் 7.00 மணிக்குள், ஈஷா யோகா மையத்தின் கார் நிறுத்துமிட வெளியேறும் பகுதி (Car Parking Exit Point) அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காயங்களுடன் கிடப்பதாகத் தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில், அங்கு பணியில் இருந்த பாதுகாப்புப் பணியாளர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தனர். அப்போது தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் ஒரு ஆண் கிடப்பதைக் கண்டறிந்தனர்.
உடனடியாக 108 ஆம்புலன்ஸ் சேவைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் மருத்துவக் குழுவினர், அந்த நபரை பரிசோதித்து அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், உயிரிழந்தவர் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த சிறுவாடி பகுதியைச் சேர்ந்த துகாசி என்பவரின் மகன் கார்த்தி (29) என்பது தெரியவந்தது. இவர் கடந்த ஒரு வருடமாக கோவையில் தங்கி ஹிட்டாச்சி (Hitachi Operator) இயக்குபவராக வேலை பார்த்து வந்துள்ளார். மேலும், இவர் 06.06.2026 அன்று ஈஷா யோகா மையத்திற்கு சுற்றுலாப் பயணியாக வந்துள்ளார் என்பதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
இவ்வழக்கின் விசாரணையின் போது, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் போலீஸார் ஆய்வு செய்தனர். அதில், உயிரிழந்த கார்த்தி அங்குள்ள மின் கட்டுப்பாட்டு அறை (Power Room) கட்டிடத்தின் மேல் கூரை பகுதிக்கு ஏறி, அங்கிருந்து கீழே குதித்ததும், அதனால் ஏற்பட்ட பலத்த காயங்களாலேயே அவர் உயிரிழந்தார் என்பதும் பதிவாகியுள்ளது.
அப்பகுதியில் இருந்த பல சிசிடிவி காட்சிகளை விரிவாக ஆய்வு செய்ததில், இந்த சம்பவத்தில் வேறு நபர்களின் தலையீடோ அல்லது சந்தேகத்திற்கிடமான சூழலோ இல்லை என்பது தெளிவாகியுள்ளது.
இதையடுத்து, உடற்கூறாய்வு செய்யப்பட்டு, அதன் ஆரம்பகட்ட அறிக்கையில், அந்த நபரின் உடலில் உள்ள காயங்கள் உயரத்தில் இருந்து கீழே விழுந்ததால் ஏற்பட்ட காயங்களோடு ஒத்துப்போவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிசிடிவி ஆதாரங்கள் மற்றும் உடற்கூறாய்வு முடிவுகளின்படி, அந்த நபர் கட்டிடத்தின் மேல் பகுதியில் இருந்து அவராகவே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவருகிறது. இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் எவ்வித சந்தேகத்திற்கிடமான விஷயங்களோ அல்லது சதியோ இருப்பதாகத் தெரியவில்லை.
உடற்கூறாய்வு நடைமுறைகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கார்த்தியின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து ஆலந்துறை காவல் நிலைய ஆய்வாளர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். விசாரணையின் போக்கில் கூடுதல் விவரங்கள் ஏதேனும் தெரியவந்தால் அது குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
