இலங்கை அதிபர் தேர்தல்!
இலங்கையில் இன்று (செப்டம்பர் 21) அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது. தற்போதைய இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக்க ஆகியோர் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
மோடி அமெரிக்க பயணம்!
குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று அமெரிக்கா பயணம் செய்கிறார். வரும் செப்டம்பர் 23-ஆம் தேதி ஐ.நா சபையில் மோடி உரையாற்றுகிறார்.
டெல்லி முதல்வராக அதிஷி பதவியேற்பு!
டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்த நிலையில், அம்மாநில கல்வித்துறை அமைச்சர் அதிஷி இன்று முதல்வராக பதவியேற்க உள்ளார்.
மக்கள் நீதி மய்யம் பொதுக்குழு கூட்டம்!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் இன்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற உள்ளது.
கலங்கரை விளக்க தினம்!
கலங்கரை விளக்க தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி கலங்கரை விளக்கத்தை சுற்றுலாப் பயணிகள் இன்று ஒரு நாள் மட்டும் கட்டணமின்றி பார்வையிட அனுமதிக்கப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 188-ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இந்தியா – வங்கதேசம் மோதல்!
இந்தியா – வங்கதேச அணிகள் மோதும் இரண்டாவது இன்னிங்ஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது.
பிரதர் படத்தின் டிரைலர் வெளியீடு!
எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள பிரதர் படத்தின் இசை மற்றும் டிரைலர் இன்று வெளியாகிறது.
மீண்டும் பணிக்கு திரும்பும் மருத்துவர்கள்!
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து மருத்துவர்கள் தொடர்ந்து 42 நாட்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், இன்று முதல் மீண்டும் பணிக்கு திரும்புகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…