தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை!
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையில் டெல்லியில் இன்றும் நாளையும் (மார்ச் 4,5) அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. Top ten news today
ஜெய்சங்கர் வெளிநாடு பயணம்!
அரசுமுறை பயணமாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று முதல் ஆறு நாட்களுக்கு இங்கிலாந்து, அயர்லாந்து நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் திறப்பு!
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் 4 ஏக்கர் பரப்பளவில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
கள் விடுதலை கருத்தரங்கம்!
திருப்பூர் மாவட்டம் கொங்கல் நகரத்தில் இன்று நடைபெறும் கள் விடுதலை கருத்தரங்கத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி!
முதல்வர் ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று (மார்ச் 3) இரவு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
உள்ளூர் விடுமுறை!
சுவாமிதோப்பு அய்யா வைகுண்டசாமியின் 193-ஆவது அவதார திருவிழாவை முன்னிட்டு, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு இன்று ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா மோதல்!
துபாயில் இன்று நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி கிரிக்கெட் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும்.
விக்ரம் படம் அப்டேட்!
அருண் குமார் இயக்கத்தில் விக்ரம், துஷாரா விஜயன் நடித்து வரும் ‘வீர தீர சூரன்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஆத்தி, அடி ஆத்தி’ பாடல் இன்று வெளியாகிறது.