டாப் 10 நியூஸ்: திமுக கண்டன பொதுக்கூட்டம் முதல் விஜய் ஆண்டனி படம் அப்டேட் வரை!

Published On:

| By Selvam

மொரிஷியஸ் சுதந்திர தின விழாவில் மோடி!

இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக மொரிஷியஸ் நாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று (மார்ச் 12) அந்நாட்டில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

திமுக கண்டன பொதுக்கூட்டம்!

தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பை கண்டித்து ‘தமிழ்நாடு போராடும்… தமிழ்நாடு வெல்லும்’ எனும் தலைப்பில் தமிழகம் முழுவதும் இன்று திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. திருவள்ளூரில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

72 இணையர்களுக்கு திருமணம்!

சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஏற்பாட்டில், 72 இணையர்களுக்கு திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் இன்று திருமணம் நடத்தி வைக்கிறார்.

கவிதை நூல் வெளியீடு!

சென்னை சத்தியமூர்த்தி பவனில் கல்லிடைக் கவிஞர் சேக்பீர் எழுதிய ‘கவிதைக் கோதை’ நூலை காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று வெளியிடுகிறார்.

சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள்!

மாசி மாதத்தின் மங்களகரமான தினமான இன்று சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100-க்கு பதிலாக 150 வில்லைகளும், இரண்டு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 வில்லைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் உள்ளூர் விடுமுறை!

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாசிமகத்தை முன்னிட்டு இன்று அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்லூரி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பரியங்காபங்கஜம் உத்தரவிட்டுள்ளார்.

‘சக்தித் திருமகன்’ டீசர் ரிலீஸ்!

அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டணியின் 25-ஆவது படமான ‘சக்தித் திருமகன்’ டீசர் இன்று வெளியாகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கனமழை அலர்ட்!

பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்ககடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மலேசியா – ஹாங்காங் மோதல்!

மலேசியாவில் உள்ள பேயுமாஸ் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் டி20 கிரிக்கெட் போட்டியில் மலேசியா – ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. top ten news today

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share