என்.சி.சி பேரணி!
டெல்லியில் உள்ள கரியப்பா பரேட் மைதானத்தில் வருடாந்திர NCC பேரணி இன்று (ஜனவரி 27) நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
மகா கும்பமேளா நிகழ்ச்சியில் அமித்ஷா
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று புனித நீராடவுள்ளார்.
ஸ்டாலின் விழுப்புரம் பயணம்!
முதல்வர் ஸ்டாலின் இன்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திற்கு செல்கிறார். இன்று மாலை திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். நாளை விழுப்புரத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமி நினைவரங்கம் மற்றும் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 சமூக நீதி போராளிகளின் மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார்.
உத்தரகாண்ட் பொது சிவில் சட்டம்!
இந்தியாவிலேயே முதல் மாநிலமாக உத்தரகாண்டில் இன்று முதல் பொது சிவில் சட்டம் அமலுக்கு வருகிறது. top-ten-news-today-in-tamil-january-27-2025
கொல்கத்தா பாலியல் வன்கொடுமை வழக்கு!
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பணியாற்றிய பயிற்சி பெண் மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கக்கோரி சிபிஐ தரப்பில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
அண்ணா பல்கலை மாணவி வழக்கு!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், சென்னை காவல் ஆணையருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
மாவட்ட செயலாளர்களுடன் விஜய் சந்திப்பு!
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பனையூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று மாவட்ட செயலாளர்களை சந்தித்து நேர்காணல் நடத்துகிறார்.
ஞானசேகரன் நீதிமன்றத்தில் ஆஜர்!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனின் 7 நாள் போலீஸ் கஸ்டடி இன்றுடன் நிறைவடைகிறது. அவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட உள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.90-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.49-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.