பாஜக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம்!
மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த முதல்வரை தேர்வு செய்வதற்கான, பாஜக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் இன்று (டிசம்பர் 4) மும்பை விதான் பவனில் நடைபெறுகிறது.
வளர்ச்சி திட்டப் பணிகள்!
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இரண்டாவது கட்டமாக ரூ.1,383 கோடி மதிப்பீட்டில் 79 புதிய திட்டப் பணிகள் துவக்கம் மற்றும் 29 முடிவுற்ற பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
நிவாரண உதவி வழங்கும் விஜய்
விழுப்புரம் மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 250 குடும்பங்களுக்கு தவெக தலைவர் விஜய் இன்று சென்னை பனையூரில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நிவாரணப் பொருட்கள் வழங்குகிறார்.
ரயில்வே தொழிற்சங்க தேர்தல்!
ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் இன்றிலிருந்து டிசம்பர் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. டிசம்பர் 13-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான டிசம்பர் 13-ஆம் தேதி 2,268 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று பெட்ரோல் விலை 13 பைசா உயர்ந்து ரூ.100.93-க்கும், டீசல் விலை 13 பைசா உயர்ந்து ரூ.92.52-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கனமழை விடுமுறை!
மழை பாதிப்பு காரணமாக, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, அண்ணாகிராமம் ஆகிய மூன்று ஊராட்சி ஒன்றியங்களுக்கும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நிவாரண முகாம்களாக உள்ள 22 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாக சைதன்யா – சோபிதா ஜோடி திருமணம்!
தெலுங்கு திரையுலகின் முன்னணி கதாநாயகன் நாக சைதன்யாவுக்கும், நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் இன்று ஹைதராபாத்தில் திருமணம் நடைபெறுகிறது.
Proba 3 செயற்கைக்கோள்!
ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தயாரித்த Proba 3 செயற்கைக்கோள், இஸ்ரோவின் பிஎஸ்எல்வி – சி 59 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று விண்ணில் பாய்கிறது.
வானிலை நிலவரம்!
கடலோர கர்நாடக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால், நீலகிரி, கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, பெரம்பலூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மனைவிக்கு தங்க நகை வாங்கிய கணவர்… ஜாக்பாட்டில் ரூ.8.5 கோடி சம்பாதித்தார்!