தென்மேற்கு பருவமழை!
கேரளாவில் இன்று (மே 30) தென்மேற்கு பருவமழை தொடங்குகிறது. கடந்த ஆண்டு ஜூன் 8ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்குகிறது.
மோடி கன்னியாகுமரி வருகை!
பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருகை தர உள்ளார். மூன்று நாட்கள் குமரியில் தங்கும் பிரதமர் மோடி, கடலுக்கு நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்ய உள்ளார். இதை முன்னிட்டு கன்னியாகுமரியில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமித்ஷா வருகை!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தமிழ்நாடு வருகிறார். மாலை 4 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கோட்டையிலுள்ள காலபைரவா் கோயில், சத்தியவாகீஸ்வரா் கோயில்களில் அவா் சுவாமி தரிசனம் செய்கிறாா். கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்துக்காக தமிழ்நாடு வந்திருந்த அமித்ஷா இந்த கோயிலுக்கு செல்வதாக இருந்தது. ஆனால் மழை காரணமாக அந்த பயணத்திட்டம் ரத்து செய்யப்பட்டது.
மகாராஜா ட்ரெய்லர்!
நடிகர் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான மகாராஜா படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியாகிறது.
ஏழாம் கட்ட தேர்தல் பிரச்சாரம் ஓய்வு!
ஜூன் 1ம் தேதி கடைசி கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. பீகார், உத்திரபிரதேசம், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், இமாச்சலப் பிரதேசம், ஒடிசா, பஞ்சாப் ஆகிய ஏழு மாநிலங்களில் 57 தொகுதிகளில் தேர்தல் நடைபெறும் நிலையில், அதற்கான பிரச்சாரம் இன்று நிறைவடைகிறது.
தருமபுரம் பட்டணப்பிரவேசம்!
மயிலாடுதுறை தருமபுரம் ஞானபுரீஸ்வரர் கோவிலில் நடைபெறும் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு இன்று பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
ஒடிஷாவில் ராகுல் பிரச்சாரம்!
மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் இன்று முடிவடையும் நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடைசி கட்ட பிரச்சாரத்தை ஒடிஷா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள சிமுலியா பகுதியில் மேற்கொள்கிறார்.
தமிழகத்தில் வானிலை!
இன்று அதிகபட்ச வெப்பநிலை, தமிழ்நாட்டில் ஒருசில பகுதிகளில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல்-டீசல் விலை!
சென்னையில் தொடர்ந்து 75வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் ரூ.92.34-க்கும் விற்கப்படுகிறது.
கே.எஸ்.ரவிக்குமார் பிறந்தநாள்!
தமிழ் சினிமாவில் அனுபவம் வாய்ந்த இயக்குனர்களில் ஒருவரான கே.எஸ்.ரவிக்குமார் இன்று தனது 66ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: நெத்திலி கருவாடு தொக்கு!
பியூட்டி டிப்ஸ்: வெயில்படும் இடங்களில் கருமை… நீக்குவது எப்படி?