துணைவேந்தர்கள் மாநாடு!
உதகையில் உள்ள ராஜ்பவனில், அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்களின் 2 நாள் மாநாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் இன்று (மே 27) தொடங்குகிறது. இதில், ஆராய்ச்சியின் சிறப்பம்சம், நிறுவன மேம்பாடு, தொழில்முனைவோரை ஊக்குவித்தல் ஆகியவை குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
பாஜக நிர்வாகிகள் கூட்டம்!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. சென்னை அமைந்தகரையில் நடைபெறும் கூட்டத்தில் மாநில நிா்வாகிகள், மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள், வேட்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
வருங்கால வைப்பு நிதி குறைதீர் முகாம்!
மத்திய அரசின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள தொழிலாளர் மாநில ஈட்டுறுதிக் கழக அலுவலகங்களில் வருங்கால வைப்பு நிதி குறைதீர் முகாம் இன்று நடைபெறுகிறது. சேலம், சென்னை மண்டலங்களிலும் முகாம் நடைபெறுகிறது.
அரசு கல்லூரிகள் – தரவரிசை பட்டியல்!
அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. அரசு கல்லூரிகளில் சேர்வதற்காக 2.30 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
கரையை கடந்தது ரிமெல் புயல்!
மேற்கு வங்கம் மற்றும் வங்க தேசத்திற்கு இடையே ரிமெல் புயல் நேற்று இரவு கரையை கடந்தது. அப்போது சூரைக்காற்று மணிக்கு 110-120 கிமீ வேகத்திலும், அதிகபட்சம் 135 கி.மீ வேகத்திலும் வீசியது. முன்னெச்சரிக்கையாக, வங்கதேசத்தில் 8 லட்சம் பேரும், மேற்கு வங்கத்தில் 1 லட்சம் பேரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
ஐபிஎல் கோப்பையை வென்ற கொல்கத்தா!
ஹைதராபாத் – கொல்கத்தா அணிகள் மோதிய நடப்பு ஐபிஎல் சீசன் தொடரின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 113 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
இதனால் 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 10.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை தன்வசமாக்கியது.
வானிலை நிலவரம்!
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக 2-3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் என்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கேரளாவை நோக்கி விவசாயிகள்!
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரளா அரசை கண்டித்து மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட விவசாயிகள் இன்று கேரளாவை நோக்கி பேரணி செல்கின்றனர். பென்னி குவிக் நினைவிடத்தில் இருந்து திரண்டு பேரணியாக செல்ல உள்ளனர்.
அக்னிச் சிறகுகள்!
மூடர்கூடம்’ பட இயக்குனர் நவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படமான ‘அக்னிச் சிறகுகள்’. டீஸர் இன்று வெளியாகிறது.
பெட்ரோல்-டீசல் விலை!
சென்னையில் தொடர்ந்து 72வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் ரூ.92.34-க்கும் விற்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: சிரிக்க தெரிந்தவர்தானே நீங்கள்? ஸ்மைல் ப்ளீஸ்!
IPL 2024 Awards: ஆரஞ்சு கேப் முதல் பர்பிள் கேப் வரை – எந்த விருது யாருக்கு?
