எடப்பாடி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு- இன்று விசாரணை!
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ரூ.4800 கோடி டெண்டர் முறைகேடு புகார் தொடர்பான மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 26) விசாரணைக்கு வருகிறது. வழக்கு விரைவில் பட்டியலிடப்படும் என்று நேற்று தெரிவித்திருந்த நிலையில் இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது.
தமிழகம் முழுவதும் சத்தியாகிரகப் போராட்டம்!
நேஷனல் ஹெரால்டு நாளிதழ் வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை டெல்லியில் இன்று விசாரணை நடத்துகிறது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று சத்தியாகிரகப் போராட்டம் நடத்த உள்ளனர்.
சென்னைக்கு மோடி வருகை – பலத்த பாதுகாப்பு!
வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவுக்கு பிரதமர் மோடி வருகை தரவுள்ளார். இதனையடுத்து நிகழ்ச்சி நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கம் முழுவதும் தேசிய பாதுகாப்பு படை, 22000 போலீசார் உட்பட துப்பாக்கி ஏந்திய போலீசார் தலைமையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இல்லாமல் இன்றும் பெட்ரோல் லிட்டர் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கொரோனா அப்டேட்!
இந்தியாவில் புதிதாக 20,279 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,945ல் இருந்து 1,903ஆக குறைந்துள்ளது.
சென்னையில் 2வது விமான நிலையம் குறித்து பேச்சுவார்த்தை!
சென்னையில் 2வது விமான நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு குறித்து விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவிடம் விவாதிக்க தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று டெல்லி செல்கிறார்.
12ம் வகுப்பு மாணவி மரணம் – சிபிசிஐடி உத்தரவு!
திருவள்ளூர் 12ம் வகுப்பு மாணவி மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை நடத்த டிஎஸ்பி செல்வகுமார் தலைமையில் 3 சிறப்பு தனிப்படை அமைத்து சிபிசிஐடி உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் நியமன முறைகேடு – நீதிமன்றம் உத்தரவு!
மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமன முறைகேடு தொடர்பாக மாநில அமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பார்த்தா சட்டர்ஜி, அவருடைய உதவியாளர் அர்பிதா சட்டர்ஜி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இருவரையும் 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு கொல்கத்தா நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் துவக்கம்!
ரூ.4.3 லட்சம் கோடி மதிப்புள்ள 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் இன்று டெல்லியில் துவங்கப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையில் 5ஜி சேவையை வழங்குவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
உலக தடகள சாம்பியன்ஷிப் – அமெரிக்கா முதலிடம்!
அமெரிக்காவில் நடைபெற்று வந்த 18வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 33 பதக்கங்களுடபதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடம் பிடித்தது. இந்தியா 1 பதக்கத்துடன் 37வது இடம் பிடித்தது.