சங்கரய்யா: அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு! top 10 news Tamil today November 16 2023
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தகைசால் தமிழர், விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்கரய்யாவின் உடல் அரசு மரியாதையுடன் இன்று (நவம்பர் 16) காலை 10 மணிக்கு சென்னை பெசன்ட் நகரில் தகனம் செய்யப்பட உள்ளது.
ஓபிஎஸ் மேல்முறையீடு மனு விசாரணை!
அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு இன்று காலை சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் வழக்காக விசாரிக்கப்பட உள்ளது.
செந்தில்பாலாஜி – முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு?
உடல்நலக்குறைவால் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் அவரை நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுத்தேர்வு அட்டவணை வெளியாகிறது!
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடுகிறார்.
மயிலாடுதுறைக்கு ஒருநாள் விடுமுறை!
மயிலாடுதுறையில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் நடைபெறும் காவிரி துலா உற்சவத்தை முன்னிட்டு இன்று ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார்.
புத்தகத் திருவிழா துவக்கம்!
மாவட்ட நிர்வாகம், பபாசி, பொது நுாலகத்துறை இணைந்து நடத்தும் விருதுநகரின் 2வது புத்தகத் திருவிழா கே.வி.எஸ்., பள்ளி மைதானத்தில் இன்று முதல் 27ஆம் தேதி வரை நடக்கிறது.
சபரிமலை கோவில் நடை திறப்பு!
கார்த்திகை மாதம் நாளை தொடங்க உள்ளதை முன்னிட்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது.
சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
தமிழ்நாட்டில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக இன்று முதல் ஜனவரி 16 வரையில் சென்னை, திருச்சி, மதுரை, கடலூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பேருத்துகள் இயக்கப்பட உள்ளது.
கொல்கத்தாவில் 2வது அரையிறுதி ஆட்டம்!
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் நுழைவதற்கான 2வது அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மதியம் 2 மணிக்கு மோதுகின்றன.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 544ஆவது நாளாக விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. top 10 news Tamil today November 16 2023
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: வகைவகையான தேநீரில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா?