4 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இதன்காரணமாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (அக்டோபர் 16) சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!
கனமழையின் தீவிரத்தால் சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை. மேலும் சேலம், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு அருகே கடக்கும்!
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வட தமிழகம்- தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் நாளை அதிகாலை கரையை கடக்கக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
உலக மயக்க மருந்து தினம்!
உலகெங்கிலும் உள்ள மயக்க மருந்து வழங்குநர்களால் செய்யப்பட்ட பணிகளை அங்கீகரிக்கவும், அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உலக மயக்க மருந்து தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 16 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
7 ரயில்கள் ரத்து!
சென்னையில் பெய்து வரும் பெருமழை காரணமாக போடிநாயக்கனூர் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஏலகிரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 7 ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு!
வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், தேனி மாவட்டம் முல்லைப்பெரியாறு அணையில் இன்று துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர்.
பி.எட் கலந்தாய்வு ஒத்திவைப்பு!
சென்னை லேடி வெல்லிங்டன் கல்வியியல் கல்லூரியில் இன்று நடைபெற இருந்த பி.எட் கணிதவியல், புவியமைப்பியல், கணினி அறிவியல், மனையியல், பொருளியல், வணிகவியல் பிரிவுக்கான மாணவர் சேர்க்கை ஒத்திவைக்கப்பட்டு வரும் 22-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
LIK ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்!
விக்னேஷ் சிவன் இயக்கி வரும் LIK படத்தின் தீமா என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று காலை 10.06 மணிக்கு வெளியாக உள்ளது.
பெங்களூரூவில் விடுமுறை!
கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் நேற்று முதல் பெய்து வரும் கனமழையால் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா – நியூசிலாந்து முதல் டெஸ்ட் !
பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்க இருக்கும் இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : சாமை தட்டை
டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு உதயநிதி கொடுத்த மழை வாக்குறுதி!
