நிர்வாகிகளுடன் விஜய் இன்று ஆலோசனை!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த வாரம் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நிர்வாகிகளின் அவசர கூட்டம் இன்று (நவம்பர் 3) பனையூரில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் சபாநாயகர் அப்பாவு
காமென்வெல்த் நாடுகளின் 67வது சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க நேற்று இரவு புறப்பட்ட தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு இன்று ஆஸ்திரேலியா சென்றடைகிறார்.
பிரியங்கா காந்தி தீவிர பிரச்சாரம்!
வயநாட்டு மக்களவை தொகுதியில் போட்டியிடும் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தியுடன் இன்று காலை 11 மணியளவில் மானந்தவாடி காந்தி பூங்காவில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், பிற்பகல் 3 மணிக்கு அரீக்கோடு பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டு வாக்கு சேகரிக்கிறார்.
10 தென் மாவட்டங்களில் கனமழை!
தென் தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நெல்லை, குமரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்றே கடைசி நாள்!
முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்தின் ஒரு வருட இலவச ஏர்ஃபைபர் திட்டத்தை (One Year Free AirFiber Plan) பெறுவதற்கு இன்றே கடைசி நாள்.
மதுரை – சென்னை முதல் மெமு ரயில்!
மதுரையில் இருந்து சென்னைக்கு முதல் முறையாக கழிப்பறை வசதியுடன் கூடிய முன்பதிவில்லாத பெட்டிகள் கொண்ட மெமு ரயில் இன்று இரவு 7.15 மணிக்கு புறப்படுகிறது.
ராமநாதபுரம் – தாம்பரம் சிறப்பு ரயில்!
ராமநாதபுரத்தில் இருந்து தாம்பரத்துக்கு இன்று பிற்பகல் 3 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் இரவு 11.40 மணிக்கு தாம்பரத்தை அடையும்.
போத்தனூர் – சென்னை ரயில்!
சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட போத்தனூரில் இருந்து சேலம் வழியாக சென்னை சென்ட்ரலுக்கு இன்று காலை 7.45 மணிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
ஆறுதல் வெற்றியை நோக்கி இந்தியா!
நியூசிலாந்துக்கு அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற 143 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி இன்று பேட்டிங் செய்கிறது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் 231வது நாளாக இன்றும் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ100.75-க்கும், டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – மொத்தமாக மளிகை சாமான்கள் வாங்க கிளம்பிவிட்டீங்களா? ஒரு நிமிஷம்!