விருதுநகரில் முதல்வர் கள ஆய்வு!
இரண்டு நாள் கள ஆய்விற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவம்பர் 9) விருதுநகர் செல்கிறார். அவர் புதிய பஸ் நிலையம் அருகே ஒரு கி.மீ தூரம் பிரமாண்ட ரோடு ஷோ நடத்த உள்ளார்.
இன்று விடுமுறை இல்லை!
தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 1ம் தேதி விடுமுறை விடப்பட்ட நிலையில் அதனை ஈடுசெய்யும் விதமாக பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் அனைத்தும் இன்று வேலை நாளாக செயல்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
சான்றிதழ் பதிவேற்றம் இன்று முதல் தொடக்கம்!
இந்தாண்டிற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு, கடந்த ஜூன் 9-ம் தேதி நடைபெற்ற நிலையில் அதன் முடிவுகள் அக்டோபர் 28-ம் தேதி வெளியானது. இதனையடுத்து 2024 தேர்விற்கான சான்றிதழ் பதிவேற்றம் இன்று முதல் தொடங்கியுள்ளது.
தொழில்நுட்ப பணிகளுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் தொடக்கம்!
டிப்ளமா, ஐடிஐ கல்வித் தகுதியுடைய ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் இன்று முதல் நவம்பர் 16-ம் தேதி வரை நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இத்தேர்வுகளை 37,808 பேர் எழுதுகின்றனர்.
திமுக மா.செ.க்கு எதிராக போராட்டம்?
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் தெற்கு மாவட்ட திமுக செயலாளரை கண்டித்து இன்று உண்ணாவிரதம் நடக்கவிருக்கிறது என்று வாட்ஸ் அப்பில் பரவிய போஸ்டர் திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது!
வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மேலும் வலுப்பெற்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5 மாவட்டங்களில் கனமழை!
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடல் விமான சேவை தொடக்கம்!
ஆந்திராவில் சுற்றுலாவை மேம்படுத்த விஜயவாடா மற்றும் ஸ்ரீசைலம் இடையே புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கடல் விமான சேவையை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று புன்னமிகாட்டில் தொடங்கி வைக்கிறார்.
நயன்தாரா திருமண டாக்குமெண்டரி ட்ரெய்லர்!
நயன் தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் குறித்த ’Nayanthara Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாக உள்ளதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
கேம் சேஞ்சர் பட டீசர் ரிலீஸ்!
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ராம் சரண், கியாரா அத்வானி நடித்துள்ள கேம் சேஞ்சர் படத்தின் டீசர் வெளியீட்டை இன்று உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.34 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…