டாப் 10 நியூஸ் : ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் முதல் ஆரஞ்சு அலர்ட் வரை!

Published On:

| By christopher

Top 10 News: From the filing of the One Nation, One Election Bill to Orange Alert for 4 districts!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல்!

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் “ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் மேக்வால் இன்று (டிசம்பர் 17) மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளார்.

4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவான நிலையில், இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரிக்கை.

ராஜஸ்தானில் மோடி

எரிசக்தி, சாலை, ரயில்வே மற்றும் குடிநீர் துறை தொடர்பான ரூ.46,300 கோடி மதிப்பிலான 24 திட்டங்களை ராஜஸ்தானில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

இன்றுக்குள் பயிர்சேத மதிப்பீடு வேண்டும்!

கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட வேளாண் நிலங்கள் தொடர்பான கணக்கெடுப்பு நடந்து வந்த நிலையில் பயிர்சேத மதிப்பீடுகளை இன்றுக்குள் நிறைவு செய்ய வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் உத்தரவிட்டுள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் கள்ளச்சாராய வழக்கு!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து சுமார் 70 பேர் பலியான வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்திருந்த நிலையில், இந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

கலெக்டர் அறிவிப்பு!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் நடக்கிறது. அதில், பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை வழங்கலாம் என்று கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

“அல் உம்மா” இயக்க தலைவர் பாஷா அடக்கம்!

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்ட “அல் உம்மா” இயக்க தலைவர் பாஷா நேற்று காலமான நிலையில் அவரது, உடல் இன்று ஹைதர்அலி திப்பு சுல்தான் ஜமாத் மசூதியில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

வணிகர் சங்க பேரமைப்பு பொதுக்குழு கூட்டம்!

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெறுகிறது.

இலவச அறுபடை வீடு ஆன்மிகப் பயணம்!

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் இரண்டாம் கட்டப் பயணம் இன்று பழநி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலிலிருந்து இன்று தொடங்குகிறது.

குகேஷுக்கு பாராட்டு விழா!

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று சென்னை வந்த குகேஷுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் இன்று மாலை 6 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

தப்பிக்குமா இந்தியா?

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்டம் இன்று தொடங்கிய நிலையில் மழை குறுக்கிட்டுள்ளது. இதுவரை இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்களை குவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இளையராஜாவை அவமானப்படுத்தி இன்புறுவது ஏன்?: நாராயணன் திருப்பதி கேள்வி!

எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது.. டி.எம்.கிருஷ்ணா பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share