ஜெய்சங்கர் இலங்கை பயணம்!
அரசு முறை பயணமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று (அக்டோபர் 4) இலங்கைக்கு பயணம் செய்கிறார்.
தவெக மாநாடு பந்தல் கால் நடும் விழா!
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாட்டுக்கு பந்தல் கால் நடும் விழா அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் இன்று காலை 4 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருப்பூர் குமரன் பிறந்தநாள்!
உயிர் போகும் நேரத்திலும் தேசிய கொடியை கீழே விடாமல் பிடித்து நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய வீரர் கொடி காத்த திருப்பூர் குமரன் பிறந்தநாள் இன்று.
திருப்பதி கோயில் பிரம்மோற்சவம் தொடங்கியது!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
துணைத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ் பெறலாம்!
கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற 10, 11 மற்றும் 12ம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய தனித் தேர்வர்கள், தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல்களை தேர்வு எழுதிய மையங்களில் இன்று பெற்றுக் கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
அமரன் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படத்தின் ‘ ஹேய் மின்னலே’ எனும் முதல் பாடல் இன்று வெளியாகிறது. இது இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் 700வது பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா – நியூசிலாந்து மோதல்!
ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியுடன் இன்று இரவு 7.30 மணிக்கு மோதுகிறது.
முதலமைச்சர் கோப்பை – இன்று தொடக்கம்!
முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
17 மாவட்டங்களில் கனமழை!
லட்சத்தீவு மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 201வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75க்கும், டீசல் ரூ.92.34க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…