தமிழகம் வரும் ம.பி. முதல்வர்!
மத்திய பிரதேசத்தில் தொழில் துவங்க முன்வருமாறு அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் இன்று (ஜூலை 25) கோவையில் நடக்கும் நிகழ்ச்சியில் தொழில்துறையினரை நேரடியாக சந்தித்து கலந்துரையாடுகிறார்.
பொது சிறப்பு பிரிவுக்கு கவுன்சிலிங்!
இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான பொது சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் இன்று தொடங்க உள்ளது.
செந்தில் பாலாஜி வழக்கு!
கைப்பற்றிய டிஜிட்டல் ஆவணங்களில் செந்தில்பாலாஜி தொடர்பான, விபரங்கள் எங்கே இடம்பெற்றுள்ளது என்பதை தெரியப்படுத்துமாறு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் விசாரணை நடத்த உள்ளது.
நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் ஆஜர்!
டெல்லி புதிய மதுபான கொள்கை விவகாரத்தில் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைவதால், முதல்வர் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்!
பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து சென்னை அண்ணாசாலை மத்திய தபால் நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் இன்று காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.
படப்பிடிப்புகள் ரத்து!
சர்தார் 2 படப்பிடிப்பின் போது விபத்தால் ஸ்டண்ட் கலைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், இதுகுறித்து விழிப்புணர்வு கொடுப்பதற்காக சென்னையில் மட்டும் இன்று ஒருநாள் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஒகேனக்கல் தடை நீட்டிப்பு!
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 30,000 கனஅடியாக அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்கவும், ஆற்றில் குளிக்கவும் 10வது நாளாக இன்றும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
மிதமான மழை பெய்யும்!
தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 130வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ100.75க்கும், டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…