கொள்முதல் விலைக்கே தக்காளி: தமிழக அரசு திட்டம்!

Published On:

| By Monisha

Tomato Price at purchase Rate

கடந்த ஒரு வாரக்காலமாக தமிழகம் முழுவதும் தக்காளி விலை படிப்படியாக உயர்ந்து 100 ரூபாயைத் தாண்டி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் தக்காளியைக் கொள்முதல் விலைக்கே நுகர்வோருக்கு விற்பனை செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் சமீப காலமாக தக்காளிக்கு உரிய விலை கிடைக்காத நிலையில் விவசாயிகள் விரக்தியடையும் சூழல் உருவானது.

இதனால் பல விவசாயிகள் தக்காளி சாகுபடியைக் கைவிட்டு மாற்றுப்பயிர் சாகுபடி செய்யத் தொடங்கினர்.

ஒரு கிலோ தக்காளி ரூ.5-க்கும் குறைவாக விற்ற நிலையால் நஷ்டத்தை சந்தித்த விவசாயிகள் பலரும் டிராக்டர் மூலம் தக்காளிப் பயிர்களை அழித்த அவலமும் அரங்கேறியது.

மேலும் வட மாநிலங்களில் கடுமையான வெப்பத்துக்குப் பிறகு பலத்த மழை பெய்து வருகிறது.

இது தக்காளி விரைவாக அழுகுவதற்கு வழிவகுத்ததால் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் தக்காளி வரத்து குறைந்து தக்காளி விலை உயர்வு மிகப்பெரிய உச்சத்தை எட்டியுள்ளது.

சில பகுதிகளில் தக்காளி விலை 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனால், இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர். மேலும், தக்காளியின் விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில், தக்காளி விலை ஏற்றத்தைக் குறைப்பது தொடர்பாக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தக்காளியை கொள்முதல் விலைக்கே நுகர்வோருக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 65 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலமாகவும், நடமாடும் காய்கறி அங்காடிகள் மூலமாகவும் கொள்முதல் விலைக்கே தக்காளியை விற்பனை செய்ய அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

விலை ஏற்றத்தால் மக்கள் பாதிப்படையாத வகையில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார் என்றும், தக்காளியை பதுக்கி வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

ராஜ்

TNPL:அதிவேக அரை சதம்…கோவை வீரர் அசத்தல்!

கனிம வளம் – ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share