ADVERTISEMENT

கிச்சன் கீர்த்தனா: தக்காளி ஊறுகாய்

Published On:

| By admin

தக்காளியின் சிவப்பு நிறத்துக்கு அதில் உள்ள லைகோபீன் (Lycopen) என்ற நிறமியே காரணமாகும். இந்த லைகோபீன் இதற்கு நிறம் தருவதோடு நின்றுவிடாமல் நமது உடலுக்கும் பல்வேறு நன்மைகளைச் செய்கிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் சருமம் முதிர்ச்சி அடையாமல் காக்கும் பணியைச் செய்கிறது. மேலும் பொதுவாக லைகோபீன், நச்சுப்பொருட்களை வெளியேற்றவும், புற்றுநோய் பாதித்த திசுக்களுடன் போராடி நோய்க்கிருமிகளுக்கு எதிராகச் செயல்படக்கூடியது. தற்போது மலிவான விலையில் கிடைக்கும் தக்காளியில் இந்த தக்காளி ஊறுகாய் செய்து வைத்துக்கொண்டு தேவையானபோது சாப்பிடலாம்; உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

என்ன தேவை?

  • தக்காளி – ஒரு கிலோ
  • நல்லெண்ணெய் – 150 மில்லி
  • புளி – 100 கிராம்
  • கடுகு, வெந்தயப்பொடி – தலா 2 டீஸ்பூன்
  • தாளிக்க
  • கடுகு, மிளகாய்த்தூள், உப்பு – தேவையான அளவு
  • வெல்லம் – சிறிதளவு
  • பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

தக்காளி, புளியைப் பொடியாக நறுக்கவும். பின்பு ஒரு கனமான வாணலியில் பாதியளவு எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து தக்காளி, புளி சேர்த்து நன்கு வதக்கவும். நன்கு வதங்கியதும் மிளகாய்த்தூள், வெந்தயப்பொடி சேர்த்துக் கலக்கவும். சிறு தீயில் மூடி போடவும். இடையிடையே மூடியைத்திறந்து கிளறி விடவும். கலவை நன்கு சுருள வதங்கியதும் மூடியைத்திறந்து உப்பு, மீதமுள்ள எண்ணெய், வெல்லம் சேர்த்துக் கிளறி, எண்ணெய் நன்கு பிரியும் வரை வதக்கி இறக்கவும்.

ADVERTISEMENT

குறிப்பு: 10 நாட்கள் வரை வெளியில் வைத்திருக்கலாம். ஃபிரிட்ஜில் வைத்தால் 2 மாதங்கள் வரை தாங்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share