கிச்சன் கீர்த்தனா: தக்காளி சிக்கன் ஃப்ரை

Published On:

| By admin

தக்காளியைப் பயன்படுத்தி ஒரே மாதிரியான உணவைச் சமைக்காமல், ஒவ்வொரு நாளும் விதவிதமாகச் சமைத்து சாப்பிடுவதால் எந்தவித அலுப்பும் ஏற்படாது. தக்காளி ஜூஸ், தக்காளி சூப், தக்காளி சாதம், தக்காளி சட்னி, தக்காளி குழம்பு என எத்தனையோ வழிகளில் சமைத்துச் சாப்பிடலாம். அசைவப் பிரியர்கள் சிக்கனுடன் தக்காளியைச் சேர்த்து இந்த தக்காளி சிக்கன் ஃப்ரை செய்து சாப்பிடலாம். இதை இரவில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

என்ன தேவை?

  • சிக்கன் – அரை கிலோ
  • தக்காளி – 3
  • வெங்காயம் – 2
  • இஞ்சி – சிறிய துண்டு
  • பட்டை, கிராம்பு, மிளகாய்த்தூள் – தேவையான அளவு
  • மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் – தலா அரை டீஸ்பூன்
  • மராட்டி மொக்கு – ஒன்று
  • மல்லித்தழை, உப்பு, எண்ணெய் – தேவைக்கு

எப்படிச் செய்வது?

சிக்கனை சிறிய துண்டுகளாக நறுக்கிச் சுத்தம் செய்யவும். தக்காளியைக் கழுவி மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். இஞ்சி, வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு பட்டை, கிராம்பு, மராட்டி மொக்கு சேர்த்து தாளித்து வெங்காயம், இஞ்சி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு சிக்கன் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் உப்பு, தக்காளி விழுது சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி, சிறிது நேரம் வேக விடவும். தண்ணீர் வற்றி எண்ணெய் பிரிந்துவரும்போது சுத்தம் செய்த மல்லித்தழை தூவி இறக்கவும்

குறிப்பு: பிராய்லர் சிக்கனாக இருந்தால் சீக்கிரமாக வெந்து விடும். நாட்டுக் கோழியாக இருந்தால் சிறிது நேரம் எடுக்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share