தக்காளி… நம் வீட்டு அன்றாடச் சமையலில் முக்கிய இடம் பிடிக்கக்கூடியது. மலிவு விலையிலும் கிடைக்கும்; அதேநேரம் மலைபோல விலை உயர்ந்து மக்களைத் திக்குமுக்காடவும் செய்யும். இதைப் பழமாக அப்படியே சாப்பிடலாம். சட்னி, தொக்கு, கூட்டு, பொரியல், சாம்பார் எனப் பல்வேறு வடிவங்களில் சமைத்தும் சாப்பிடலாம். அவற்றில் ஒன்று அனைவருக்கும் ஏற்ற இந்தத் தக்காளி அடை.
என்ன தேவை?
- பெங்களூரு தக்காளி – 4
- புழுங்கலரிசி – 200 கிராம்
- பச்சரிசி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – தலா 100 கிராம்
- பூண்டு – 5 பல்
- இஞ்சி – சிறிய துண்டு
- காய்ந்த மிளகாய் – 4
- சோம்பு – 2 டீஸ்பூன்
- பெரிய வெங்காயம் – 3
- மல்லித்தழை – கைப்பிடியளவு
- கறிவேப்பிலை – சிறிதளவு
- தேங்காய் பொடியாக நறுக்கியது – ஒரு டேபிள்ஸ்பூன்
- மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
- உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
புழுங்கலரிசி, பச்சரிசி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயம், கறிவேப்பிலை, மல்லித்தழையைப் பொடியாக நறுக்கவும். தக்காளியை வெந்நீரில் மூன்று நிமிடம் போட்டு எடுத்து தோல் உரிக்கவும். அரிசி பருப்புக் கலவையில் உப்பு, காய்ந்த மிளகாய் பூண்டு, இஞ்சி, சோம்பு, மஞ்சள்தூள் சேர்த்து, தண்ணீர்விட்டு மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கவும். மாவுடன் மல்லித்தழை, கறிவேப்பிலை, தேங்காய் சேர்த்து அடை மாவு பதத்துக்குக் கரைக்கவும். தோசைக்கல்லில் மாவைச் சற்று கனமான அடைகளாக ஊற்றி, இருபுறமும் திருப்பி விட்டு, எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும்.
குறிப்பு: மூன்று கரண்டி அடை மாவில் ஒரு முட்டை விகிதம் கலந்து ஊற்றினால் முட்டை தக்காளி அடை ரெடி!