சுங்கச்சாவடி கட்டண உயர்வு: சென்னையில் எந்தெந்த இடங்கள்?

Published On:

| By Selvam

புதிய நிதியாண்டு இன்று (ஏப்ரல் 1) தொடங்கும் நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. சென்னையில் ஐந்து சுங்கச்சாவடிகளில் ரூ.10 முதல் ரூ. 60 வரை கட்டணம் உயர்ந்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தைவிட 5 முதல் 10 சதவிகிதம் வரை கட்டணத்தை உயர்த்த முடிவு செய்து, கட்டண உயர்வு குறித்த அறிக்கையை நெடுஞ்சாலை அமைச்சகத்திடம் சமர்ப்பித்தது.

அதன் அடிப்படையில் சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு  இன்று (ஏப்ரல் 1) முதல் சுங்கச்சாவடிகளில் அமலுக்கு வந்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்குச் செல்லும் வழிகளிலும் கோவை, மதுரை செல்லும் வழிகளிலும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்ந்துள்ளது.

சென்னையைப் பொறுத்தமட்டில் புறநகர் பகுதியில் உள்ள பரனூர், வானகரம், சூரப்பட்டு, செங்குன்றம், பட்டறை பெரும்புதூர்  ஆகிய ஐந்து இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் இந்தச் சுங்கக்கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

அதன்படி, காருக்கு 60 ரூபாயிலிருந்து 70 ரூபாயாகவும், இலகுரக வாகனத்துக்கு 105 ரூபாயிலிருந்து  115 ரூபாயாகவும், லாரி மற்றும் பேருந்துகளுக்கு 225 ரூபாயிலிருந்து  240 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

இந்தச் சுங்கக்கட்டணம் உயர்வதால், லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சுங்கக்கட்டண உயர்வுக்கு வணிகர் சங்கத்தினரும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வாகன ஓட்டிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ராஜ்

தமன்னா, ராஷ்மிகா ஆட்டத்துடன் தொடங்கிய ஐபிஎல் திருவிழா!

பொதுச் செயலாளர் ஆனதும் எடப்பாடி பங்கேற்ற முதல் நிகழ்ச்சி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share