நீதிமன்ற உத்தரவையும் மீறி சுங்க கட்டணம் வசூலிக்கப்படுவதால் தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் லாரிகளை குறுக்கே நிறுத்தி அதன் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Toll collection in violation of court order
மதுரையிலிருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் எலியார்பத்தி , புதூர் பாண்டியபுரம் ஆகிய இரண்டு இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைந்துள்ளன.
இந்த சுங்கச்சாவடிகளை நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.
ஆனால் இந்த வழியில் முறையான சாலை பராமரிப்பு இல்லை என்று கூறி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தூத்துக்குடியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனு தாக்கல் செய்திருந்தார்.
அவர் தனது மனுவில், “மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் 2011 ஆம் ஆண்டு முதல் இந்த இரு சுங்கச்சாவடிகளும் செயல்பாட்டில் உள்ளன. தேசிய நெடுஞ்சாலைகளில் இருபுறமும் மரம் நடுவது மற்றும் நெடுஞ்சாலையின் சென்டர் மீடியனில் செடிகள் நட்டு பராமரிப்பது உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. இந்த சுங்கச்சாவடிகளுக்கு ஒப்பந்தத்தை எடுத்த தனியார் நிறுவனம் அதற்கான வசதிகளை செய்யவில்லை.
சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் மதுரை தூத்துக்குடி நெடுஞ்சாலையை பராமரிக்க 563 கோடி ரூபாய் செலவு செய்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் செய்யவில்லை.
அதேநேரம் ஒப்பந்த தொகையை விட கூடுதலான தொகையை தனியார் நிறுவனம் வசூல் செய்ததாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்தது.
மாதம்தோறும் 11 கோடி ரூபாய் சுங்கம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் பராமரிப்பு பணிக்காக வெறும் 30 லட்சம் ரூபாய் மட்டுமே செலவிடப்படுகிறது.
சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தியும் தரமான சாலை மற்றும் கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
எனவே மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருபுறங்களும் மரங்கள் நட்டு வாகன ஓட்டிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரும் வரை சுங்க கட்டணம் வசூல் செய்ய தடை விதிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியம் மற்றும் மரியா கிளாட் அமர்வில் ஜூன் 3ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது தேசிய நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதித்த நீதிபதிகள் தேசிய நெடுஞ்சாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளின் விவரங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.
நீதிமன்றம் நேற்று சுங்க கட்டணம் வசூலிக்க தடை விதித்த போதும் இன்று (ஜூன் 4) வழக்கம் போல இரு சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் வசூலிக்கப்பட்டன.
இந்த நிலையில் இன்று காலை புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடிக்கு வந்த லாரிகள், நீதிமன்ற உத்தரவு உள்ளதால் சுங்க கட்டணம் செலுத்த மாட்டோம் என்று கூறின.
ஆனால் சுங்க சாவடி ஊழியர்களோ தங்களுக்கு நீதிமன்ற உத்தரவு நகல் இன்னும் கிடைக்கவில்லை என்றும் உத்தரவு நகல் கிடைத்தால் தான் அதை நாங்கள் செயல்படுத்துவோம் என்றும் தெரிவித்திருக்கின்றனர்.
இதை ஏற்க மறுத்த லாரி உரிமையாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி சென்ற லாரிகள் அனைத்தையும் ஒவ்வொரு கவுண்டர் வழியாகவும் வரிசையாக நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த சுங்கச்சாவடியில் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. காலை 9:00 மணிக்கு தொடங்கிய போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
மற்ற வாகனங்கள் சுங்கச்சாவடியில் உள்ள அவசர வழியான விஐபி வழியில் அனுமதிக்கப்படுகின்றன.
மதுரையில் இருந்து செல்லும் அனைத்து வாகனங்களும் சுங்கச்சாவடியில் உள்ள ஒரு வழியில் மட்டும் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. Toll collection in violation of court order
