தமிழ் சினிமாவில் கடந்த ஜுன் 16ஆம் தேதி, சூர்யா, ப்ரியா பவானிசங்கர் நடித்த‛பொம்மை, சார்லி நடித்த எறும்பு,’ ஆகிய நேரடி தமிழ்ப் படங்களும், பிரபாஸ் நடித்த ‘ஆதிபுருஷ், ஊர்வசி நடித்த சார்ல்ஸ் என்டர்பிரைசஸ்’ ஆகிய மொழி மாற்று படங்களும் வெளிவந்தன.
இவற்றில் ‘எறும்பு’ படம் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. இதுதவிர திரையரங்குகளில் வசூல் ரீதியாக மிகப் பெரும் ஏமாற்றத்தை கடந்த வாரப் படங்கள் கொடுத்துள்ளன.
இந்த வாரம் இன்று ஜுன் 23ம் தேதி, சஞ்சிதா ஷெட்டி, ராஜ்கபூர் நடித்துள்ள அழகிய கண்ணே, ராக்கி படத்தின் நாயகன் வசந்த் ரவி நடித்துள்ள ஹாரார் படமான
அஸ்வின்ஸ், முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள மலைவாழ் மக்கள் வாழ்க்கை பற்றிய ‘நாயாட்டி’, தென்மாவட்ட மக்களிடம் அருகி வரும் தங்க ஆபரணத்தை மையமாக கொண்டுள்ள பசுபதி, ரோகிணி நடித்துள்ள ‘தண்டட்டி’, விக்ரம் பிரபு நடித்துள்ள ‘பாயும் ஒளி நீ எனக்கு’, சுந்தர்.சி நடித்துள்ள ’தலைநகரம் – 2’ மலையாள மொழி மாற்று படமான ரெஜினா என ஆறு படங்கள் வெளியாகிறது.
இவற்றுடன் கமல்ஹாசன், ஜோதிகா நடிப்பில் 2006ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற வேட்டையாடு விளையாடு படம் தமிழ்நாடு முழுவதும் குறிப்பிட்ட திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்படுகிறது.
இவற்றில் சுந்தர் சி- இயக்குநர் துரை கூட்டணியில் வெளிவரும் தலைநகரம் – 2, பசுபதி, ரோகிணி நடித்துள்ள தண்டட்டி, விக்ரம்பிரபு நடித்துள்ள பாயும் ஒளி நீ எனக்கு ஆகிய மூன்று படங்களும் நட்சத்திர அந்தஸ்து படங்கள் என்பதால் இயல்பாக திரையரங்குகள் கிடைத்துள்ளன.
தொடர்ந்து படங்களை வெளியிட்டு வரும் சக்தி பிலிம் பேக்டரி வெளியீடாக வரும் அஸ்வின் படத்திற்கு தேவைக்குரிய திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற படங்கள் குறைந்தபட்ச திரைகளில், குறைந்த காட்சிகளே திரையிடப்படுகிறது.
இராமானுஜம்